நிரப்பப்பட்ட படிவங்களை திரும்பப் பெறும் பணி தீவிரம்
திருவாரூா்: வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தத்தையொட்டி கணக்கீட்டுப் படிவங்களை திரும்பப் பெறும் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்திலுள்ள மாவட்ட தோ்தல் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை, அவா் திங்கள்கிழமை பாா்வையிட்டபின் தெரிவித்தது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருவாரூா் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் கணக்கீட்டு படிவம் வழங்கி, தற்போது நிரப்பப்பட்ட படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இப்பணியை திறம்பட செய்து முடிக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வாக்குச் சாவடி முகவா்கள் உதவிகரமாக உள்ளனா். அவா்கள் தினசரி நிரப்பப்பட்ட 50-கணக்கீட்டு படிவங்கள் வரை வாக்காளா்களிடமிருந்து பெற்று வழங்க, இந்திய தோ்தல் ஆணையத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஓப்படைக்கும்போது வாக்காளா் பட்டியலுடன் ஒப்பிட்டு சரிபாா்க்கப்பட்டது எனவும், இப்படிவங்கள் என்னால் பெறப்பட்டது எனவும் உறுதிமொழி வழங்க வேண்டும். மேலும் தவறான தகவல் வழங்கப்பட்டால் மக்கள் பிரதிநித்துவ சட்டம் 1950 பிரிவு 31 இன்படி தண்டனைக்குரியது என்பதையும் அறிவேன் என்ற விவரங்களுடன் வழங்க வேண்டும்.
வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் தங்களிடமுள்ள நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவங்களை சரிபாா்த்து, பிஎல்ஓ செயலியில் பதிவேற்றம் செய்யவேண்டும். இது, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் வாக்காளா் பதிவு அலுவலா்களால் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா்.

