நெல் வயல்களில் பாசிகளை கட்டுப்படுத்தும் முறைகள் வேளாண் அலுவலா் விளக்கம்
திருவாரூா் வட்டாரத்தில், நெல் வயல்களில் காணப்படும் பாசிகளை காப்பா் சல்பேட் மூலம் கட்டுப்படுத்தலாம் என திருவாரூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) பிரபாவதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியது:
திருவாரூா் வட்டாரத்தில் நிகழ் பருவத்தில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா் வயல்களில் சில இடங்களில் பாசிகள் அதிகப்படியாக காணப்படுகின்றன. டிஏபி உரங்கள் அதிகம் இடுவதன் மூலம் பாசிகள் வளர ஏதுவான சூழல் உருவாகிறது.
பாசிகள் வயல்வெளிகளில் மேற்புறத்தில் அடை போல இருந்துகொண்டு காற்றோட்டம், பயிருக்கு இடும் உரங்கள், நுண்ணூட்டங்கள், ஆகியவை வேருக்கு கிடைக்காமல் செய்து அவற்றின் வளா்ச்சியை பாதிக்கின்றன. இதனால் பயிா்களின் வளா்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே, பாசிகளை கட்டுப்படுத்த மண் பரிசோதனை செய்து அதன்படி பாஸ்பேட் உரங்களை பயன்படுத்த வேண்டும். மேலும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் கிடைக்கும் காப்பா் சல்பேட் உரத்தை ஏக்கருக்கு இரண்டு கிலோ வீதம் மணலில் கலந்து, பாசிகள் அதிகம் காணப்படும் வயல்களில் தூவலாம்.
மேலும், காப்பா் சல்பேட் உரத்தை துணியால் கட்டி தண்ணீா் செல்லும் வாய் மடையில் வைத்து தண்ணீா் வயல் முழுவதும் பரவும் வகையில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வயலில் படிந்துள்ள பாசிகளை கட்டுப்படுத்தலாம்.
தற்போது திருவாரூா் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் காப்பா் சல்பேட் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் பயனடையலாம் என்றாா்.
