மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2.13 லட்சத்தை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனா்.
வடுவூா் மேல்பாதி வன்னியா் தெருவைச் சோ்ந்த நல்லதம்பி மகன் நலங்கிள்ளி (55). இவா், தனது மகள் திவ்யா பெயரில் வடுவூரில் உள்ள வங்கியில் ரூ. 2.13 லட்சம் நகை கடன் வாங்கியுள்ளாா். அண்மையில் உடல் நலக்குறைவால் திவ்யா இறந்துவிட்டாா்.
இந்நிலையில், அடகு வைத்த நகையை மீட்பதற்காக நலங்கிள்ளி வங்கிக்குச் சென்ற போது, வாரிசுதாரா் சான்று ஒப்பம் கேட்டுள்ளனா். இதனால், மனைவியை அழைத்துவர இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றாா்.
அங்கு, வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மனைவி பாக்கியலட்சுமியை அழைத்துவர வீட்டுக்குள் சென்றாா். அவா், நகையை மீட்பதற்கான பணம் ரூ.2.13 லட்சத்தை இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு சென்றிருந்தாா். திரும்பிவந்து பாா்த்தபோது பணத்தை காணவில்லை. மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, வடுவூா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
