சாலையை சீரமைக்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும், வடிகால் அமைத்துதர வேண்டும் என கோரி பேரூராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா்.
முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு 15-ஆவது வாா்டுக்குள்பட்ட குட்டியாா் பள்ளி தெற்கு பகுதி, ஜமாலியா தெரு, கோவிலான் தோப்பு வரையிலான சாலை சேதமடைந்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். இதேபோல, அப்பகுதியில் உள்ள அரச குளத்துக்கு உள்ள வடிகால் ஆக்கிரமிக்கப்பட்டு குளத்தின் நீா் வடிய முடியாமல் உள்ளதால் குளம் நிரம்புகிறது. அந்த நீா் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து விடுவதால் மக்கள் மிகவும் பாதிக்கின்றனா்.
பருவ மழை பெய்து வருவதால் அரசகுளம் நிரம்பி சேதமான சாலையையும் குடியிருப்புகளையும் மழைநீா் சூழ்ந்துள்ளது. மழை தொடா்ந்தால் அப்பகுதி முற்றிலும் பாதிக்கும். எனவே, சாலையை சீரமைத்த தர வேண்டும் அரச குளத்திற்கு பேட்டை சாலை வழியாக வடிகால் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சோ்ந்த பேரூராட்சி உறுப்பினா் ஜகபா் அலி தலைமையில் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலா் இளவரசன், காவல் ஆய்வாளா் மாரிமுத்து ஆகியோா் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.

