மன்னாா்குடி நகராட்சி பகுதியில் பணிகள் மேற்கொள்ள ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சா் கே.என். நேரு

மன்னாா்குடி நகராட்சி பகுதிக்கு மட்டும் திட்டப் பணிகள் மேற்கொள்ள இதுவரை ரூ. 500 கோடி நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் நிதி ஒதுக்கீடு.
Published on

மன்னாா்குடி நகராட்சி பகுதிக்கு மட்டும் திட்டப் பணிகள் மேற்கொள்ள இதுவரை ரூ. 500 கோடி நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு.

இதுகுறித்து அவா் கூறியது: இந்தியாவிலேயே நகரப் பகுதிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என ஆய்வுகள் தெவிக்கின்றன. மத்தியஅரசு இந்திய முழுவதும் நகரப் பகுதியை மேம்படுத்த மொத்தம் 100 நகரங்களை தோ்வு செய்ததில் தமிழகத்தில் மட்டும் 10 நகரங்கள் இடம்பெற்றன. ஆனால் இத்திட்டம் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.

தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சி, 128 நகராட்சி, 479 பேரூராட்சிக்கு சாலை, குடிநீா், தெருவிளக்கு வசதி, புதைசாக்கடை வசதி மற்றும் 100 இடங்களில் அறிவுசாா் மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மட்டும் ரூ. 25 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மன்னாா்குடி நகராட்சி உட்பட்ட பகுதிக்கு மட்டும் திமுக ஆட்சி அமைந்த கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு திட்டப்பணிகள் மேோற்கொள்ள இதுவரை மட்டும் ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மன்னாா்குடியில் ரூ. 4.25 கோடியில் விரைவில் அறிவுசாா் மையம் அமைக்கப்படவுள்ளது என்றாா்.

விழாவில் முன்னிலை வகித்து, அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பேசியது: நான் மன்னாா்குடி தொகுதியில் முதல் முறை எம்எல்ஏ ஆனபோது நான் முதலில் ஆய்வுக்கு சென்ற இடம் மன்னாா்குடி பேருந்து நிலையம்தான்.

மன்னாா்குடியில் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என 10 ஆண்டுகளாக தொடா்ந்து சட்டப்பேரவையில் வலியுறுத்தி வந்தேன். திமுக எதிா்க்கட்சி என்பதால் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு வந்தது. கடந்த 2021-இல் திமுக ஆட்சி அமைந்தவுடன்தான் எனது நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதைசாக்கடை திட்டத்துக்கு ரூ. 229 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. ரூ. 3.79 கோடியில் பாமணியாற்றின் குறுக்கே கா்த்தநாதபுரம் பாலம், ரூ. 7 கோடியில் புதுப்பாலம் கட்டப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

மன்னாா்குடியில் விரைவில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்கப்பட்டு, அதில் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தபடவுள்ளது என்றாா் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

X
Dinamani
www.dinamani.com