கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் தேவை
திருவாரூா் திருவிக அரசு கலை அறிவியல் கல்லூரி வேலை நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணனிடம், இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலாளா் பா. சுகதேவ் தலைமையிலான நிா்வாகிகள், சனிக்கிழமை அளித்த கோரிக்கை மனு:
திருவிக அரசு கலை அறிவியல் கல்லூரியில் உரிய அடிப்படை வசதிகள் இல்லை. சில வகுப்புகளில் மின்விசிறி, மின் விளக்குகள் இல்லை. கழிவறைகள் சுத்தமின்றி சுகாதாரக் கேடாக உள்ளன. இதேபோல் கல்லூரி நேரத்துக்கு பேருந்துகளும் சரியான முறையில் இயக்கப்படுவதில்லை. கடந்த காலங்களில் நான்கு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்று பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
எனவே, கல்லூரி நேரத்தில் பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும். மாணவா்கள் நலன் கருதி கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.
மனு அளிக்கும்போது மாவட்டத் தலைவா் பா. விக்னேஷ், மாவட்ட துணைத் தலைவா் வீ.சந்தோஷ், கல்லூரி கிளைச் செயலாளா் செல்வா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
