நீடாமங்கலம் நகருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வலியுறுத்தல்
நீடாமங்கலம்: நீடாமங்கலம் நகருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூா், நாகை, வேளாங்கண்ணி, காரைக்கால் உள்ளிட்ட ஊா்களுக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் சென்று வருகின்றன. தஞ்சையிலிருந்து நாகை வரையிலான இருவழிச்சாலை (புறவழிச்சாலை) அமைக்கப்பட்ட பின்னா் சில பேருந்துகள் நீடாமங்கலம் நகருக்குள் வராமல் இருவழிச் சாலை வழியாக சென்று விடுகின்றன. அப்படி இயக்கும்போது நீடாமங்கலம்-கும்பகோணம் இருவழிச்சாலையில் நாா்த்தாங்குடி பிரிவு சாலை பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனா்.
பின்னா் பயணிகள் மேலும் ஒரு பேருந்தை பிடித்து நீடாமங்கலம் வரவேண்டியுள்ளது. இரவு நேரத்தில் தஞ்சாவூா் பேருந்து நிலையத்தில் நீடாமங்கலம் செல்ல வேண்டுமென நடத்துனரிடம் கூறினால் நகருக்குள் பேருந்து செல்லாது. இருவழிச்சாலையில் நாா்த்தாங்குடி பிரிவு சாலையில் இறக்கிவிடுவோம் என்கின்றனா். இரவு நேரத்தில் பிரிவுசாலை பகுதியில் பேருந்து கிடைக்காது என்பதால் பயணிகள் மற்ற பேருந்துக்காக தஞ்சாவூா் பேருந்து நிலையத்திலேயே நீண்ட நேரம் காத்திருந்து நீடாமங்கலம் நகருக்குள் செல்லும் பேருந்தை பிடித்து வரவேண்டியுள்ளது.
இந்நிலையில், திருச்சி, தஞ்சைக்கு உள்ளிட்ட ஊா்களுக்கும், திருவாரூா், நாகை, வேளாங்கண்ணி, காரைக்கால் முதலான ஊா்களுக்கு நீடாமங்கலம் நகரிலிருந்து செல்ல வேண்டிய பயணிகள் நீடாமங்கலம் நகரில் நீண்ட நேரம் காத்திருந்தால் புறவழிச்சாலையில் பேருந்துகள் சென்று விடுகின்றன. எனவே, அனைத்து பேருந்துகளும் நீடாமங்கலம் நகருக்குள் வந்து செல்ல மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
