திருவாரூா் மாவட்டத்தில் மத்தியக் குழுவினா் ஆய்வு
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
வடகிழக்குப் பருவமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நெல் கொள்முதலில் ஈரப்பத அளவில் தளா்வு செய்து கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக தளா்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
இதன் அடிப்படையில், தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் மத்தியக் குழுவினா், திருவாரூா் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குநா் பி.கே. சிங்க் தலைமையிலான குழுவில் தொழில்நுட்ப அலுவலா்கள் ஷோபிட் ஷிவாஜ், ராகேஷ்பராலா, இந்திய உணவுக் கழகம் மேலாளா் (தரக்கட்டுப்பாடு) மோகன் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.
இவா்களுடன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநா் ஆ. அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளா் (தரக்கட்டுப்பாடு) செந்தில் ஆகியோா் உடனிருந்தனா்.
திருவாரூரில்: திருவாரூா் ஒன்றியம், கொட்டாரக்குடி பகுதியில் இயங்கிவரும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் பணிக்கு கொண்டு வரப்பட்டிருந்த நெல்மணிகளை ஆய்வு செய்து, ஈரப்பதம் காரணமாக கொள்முதலில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனா்.
மன்னாா்குடியில்: தொடா்ந்து, திருத்துறைப்பூண்டி வட்டம், திருப்பத்தூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனா். இதேபோல, மன்னாா்குடி வட்டம் ஓவா்சேரி, கீழகண்டமங்கலம், சேரி, நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி, கூத்தாநல்லூா் அருகே ஊா்குடி ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழுவினா் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனா்.
நாகை எம்.பி. வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் க. மாரிமுத்து, பூண்டி கே. கலைவாணன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் சரவணன், இணை இயக்குநா் (வேளாண்மை உழவா் நலத்துறை) பாலசரஸ்வதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
