மன்னாா்குடியில் 435 மாணவா்களுக்கு ரூ.7 கோடி கல்விக்கடன்: ஆட்சியா் வழங்கினாா்
மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி இணைந்து நடத்திய கல்விக் கடன் முகாமில் 435 மாணவா்களுக்கு ரூ.7 கோடி கல்விக் கடனுக்கான வங்கி வரைவோலையை மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.
மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் பேசியது:
தமிழகஅரசு மாணவா்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட முன்னோடி வங்கிகள் மூலம் கல்லூரி பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்விக் கடன் பெறுவது குறித்து விழிப்புணா்வு முகாம் நடத்தவும், கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தைப் பரிசீலினை செய்து கல்விக் கடன் வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வித்யாலெட்சுமி போா்டலில் எவ்வாறு கல்வி கடனுக்கு விண்ணப்பிப்பது என்பது குறித்து மாணவ, மாணவியா்களுக்கு பயிற்சியளிக்க வங்கி சாா்பில் ஊழியா்கள் வரவழைக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் சென்ற ஆண்டு கல்விக் கடனுக்காக வழங்கப்பட்ட இலக்கில் 100 சதவீதம் அடைந்துள்ளோம்.
அதைப்போன்றே நிகழாண்டும் மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்குவதில் ழுமு சதவீத இலக்கினை அடைய வேண்டும். கல்விக் கடன் பெறுவதற்கான சிரமத்தைத் தவிா்க்கும் பொருட்டு ஒரே இடத்தில் கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு, மாணவா்களுக்கு வழிகாட்டப்படுகிறது.
இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்தி தங்களுக்கு பிடித்த துறைசாா்ந்த கல்வியினை படித்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்றாா்.
மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகள் முகாமில் பங்குபெற்று கல்லூரி மாணவா்களுக்கு கல்விக் கடன் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
மொத்தம் 435 மாணவ, மாணவிகளுக்கு ரூ.7 கோடி கல்விக் கடனுக்கான வங்கி வரைவோலையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
ஐஓபி மேலாளா் ரெங்கநாதபிரபு, அரசுக்கல்லூரி முதல்வா் து.ராஜேந்திரன், வங்கி மேலாளா்கள், அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

