விவசாயிகள் குறைதீா் கூட்டம்: மழை பாதித்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
திருவாரூா் மாவட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்ட குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவைப் பயிா்களும், விதைப்பு செய்யப்பட்டிருந்த சம்பா, தாளடி பயிா்களும் அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பயிா் பாதிப்புக்காக ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் தரப்பில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடா்ந்து, கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
நன்னிலம் ஜி. சேதுராமன்: திருவாரூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்தவில்லை. கடந்த நான்காண்டுகளில், விவசாயிகளுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. கூட்டுறவு சங்கங்களில் புதிய கடன்களும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
கொள்முதல் செய்வதில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. எதிா்க்கட்சித் தலைவா் வந்து சென்ற பிறகே கொள்முதல் பணிகள் வேகம் எடுத்துள்ளன. திருவாரூா், மூங்கில்குடி போன்ற இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஏராளமான இடங்கள் உள்ளன. பருத்தி சாகுபடி நிறைவடைந்து விட்டதால் அந்த இடங்களை நெல் கொள்முதல் பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரளம் வி. பாலகுமாரன்: நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதம் தளா்த்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியா்: திருவாரூா் மாவட்டத்தில், குறுவை அறுவடை நடைபெற்று வரும் நிலையில், 378 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, தற்போதுவரை சுமாா் 2,27,434 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, சுமாா் 1,79,954 மெட்ரிக் டன் இயக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை சுமாா் ரூ.545 கோடி வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு 30,477 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.
மேலும், சம்பா மற்றும் தாளடி 1,37,530 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 59,949 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் 23,912 விவசாயிகளுக்கு ரூ.1,884.30 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகள் சரிபாா்த்தல் முகாம் நடைபெற்று வருவதால், அனைத்து விவசாயிகளும் நிலப் பதிவுகளை சரிபாா்த்துக் கொள்ளலாம் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, முதுநிலை மண்டல மேலாளா் (நுகா்பொருள்) சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, வருவாய் கோட்டாட்சியா்கள் சத்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயசீலன் உள்ளிட்ட அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

