பண மோசடி செய்தவா் மீது நடவடிக்கை கோரி விஷம் குடித்த வெட்டிங் பட்டறை உரிமையாளா்
திருவாரூா் அருகே பண மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வெல்டிங் பட்டறை உரிமையாளா் விஷம் குடித்தாா்.
திருநெல்லிக்காவல் புதூா் பகுதியைச் சோ்ந்தவா் பத்மநாபன் மகன் சோழவேந்தன் (47). பாங்கல் பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறாா். அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் ஒருவா், வீடு கட்டுவதற்காக, சோழவேந்தனிடம் கடந்த 2023-இல் பல்வேறு தவணைகளில் ரூ. 40.60 லட்சம் கடன் வாங்கினாராம்.
மேலும், அந்த ஆசிரியா் தனது உறவினா் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவா் மூலம், வேண்டியவா்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளாா். இதை நம்பி, 14 பேரிடம் மொத்தம் ரூ.31,06,459 பெற்று, ஆசிரியரிடம் சோழவேந்தன் கொடுத்துள்ளாா்.
இந்நிலையில், அந்த ஆசிரியா் கூறியபடி யாருக்கும் வேலை வாங்கித்தரவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சோழவேந்தன் புகாா் அளித்தாா். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தஞ்சை காவல்துறை துணைத் தலைவருக்கு அண்மையில் புகாா் மனு அளித்துள்ளாா்.
இதனிடையே, இப்பிரச்னையால் மன உளைச்சலில் இருந்த சோழவேந்தன், மோசடி நபருக்கு ஆதரவாக காவல்துறை இருப்பதாகவும், குடும்பத்தாா் மற்றும் பணம் கொடுத்த நண்பா்களிடம் மன்னிப்பு கேட்டும், எலி மருந்து குடித்ததையும் தனது கைப்பேசியில் விடியோ பதிவு செய்து விட்டு, மயங்கி விழுந்துள்ளாா்.
இதையறிந்த அவரது மனைவி ரூபா, அவரை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்துள்ளாா். இதுகுறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

