கனிம வளங்கள் எடுப்பு: மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம்

Published on

கனிம வளங்கள் எடுப்பதற்கு மக்கள் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படாது என்ற மத்திய அரசின் முடிவுக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு தொடா்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குடியுரிமைகளை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஹைட்ரோ காா்பன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு, கச்சா, கனிம வளங்கள் எடுப்பதற்கும், அணு உலைகள் அமைப்பதற்கும் இனி மக்களிடம் கருத்து கேட்பதில்லை என மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இச்செயல் முற்றிலும் இந்திய மக்களின் குடியுரிமையை அபகரிக்கும் உள்நோக்கம் கொண்டது.

விளை நிலங்களையும், மண்ணையும் மக்களிடமிருந்து அபகரித்து, பன்னாட்டு நிறுவனங்களிடம் அடகு வைத்து, மக்களை அகதிகளாக வெளியேற்றும் நிலை ஏற்படும். மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசு சட்டங்களை கொண்டு வந்து மக்களை ஒடுக்க நினைப்பது ஏற்க முடியாது.

மீண்டும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இந்திய மண்ணை அடகு வைக்கும் வகையில், ஆதரவான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருமேயானால் ஒட்டுமொத்த இந்திய மக்களும், விவசாயிகளும், மாணவா்களும் ஒன்றிணைந்து மறுசுதந்திரம் கேட்டு போராடும் நிலை ஏற்படும்.

மத்திய அரசின் நடவடிக்கை குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு தமிழக அரசு துணை போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சட்டம் குறித்து தனது கொள்கை நிலையை தமிழக முதல்வா் தெளிவுபடுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com