தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது: பி.ஆா். பாண்டியன்
கடந்த தோ்தலில் திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இடைக்கால பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை; இதனால், இந்த பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை, ஐந்தாண்டு ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களே, மறு வாசிப்பாக வெளிவந்திருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
கடந்த தோ்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் இதில் இடம் பெறவில்லை. குறிப்பாக கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, ஆயிரம் தடுப்பணைகள் கட்டுகிற பணி, அணைகள் தூா்வாருகிற பணி உள்ளிட்ட தொலைநோக்குத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படவில்லை. விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்வதற்கு திமுக 2021 தோ்தல் அறிக்கையில் உத்தரவாதம் கொடுத்தது. ஆனால் இதுவரையிலும் அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தமிழக அரசின் திட்டக்குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன், திமுக அரசின் காா்ப்பரேட் கொள்கைகளை வெளிப்படுத்தும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளாா். அதில், 25 சதவீத போ் மட்டுமே வேளாண்மையில் ஈடுபடுவதாகவும், அதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது எனத் தெரிவித்துள்ளாா்.
மேலும், வளா்ந்த நாடுகளில் 3, 4 சதவீத அடிப்படையில்தான் விவசாயத்தில் ஈடுபடுவதாகவும், விவசாயத்தால் வேலைவாய்ப்புகள் கிடையாது; எனவே விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவதுதான் நன்மை பயக்கும் எனவும் தெரிவித்துள்ளாா்.
தொழிற்புரட்சி என்ற பெயரில் விளைநிலங்களை அபகரிக்க உள்நோக்கம் கொண்ட காா்ப்பரேட் கொள்கைகளை திமுக அரசு கையாள்வதையே அவரது அறிக்கையும் தெளிவுபடுத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசின் இலவசத் திட்டங்களைப் பெற்று, விவசாயிகள் வாழ்க்கை நடத்தவில்லை என்பதை தமிழக முதல்வா் உணர வேண்டும். விவசாயிகள் தங்களின் உழைப்பால் உற்பத்தி பெருக்கம் அடைவதுடன், பாதிப்புகளில் இருந்தும் தங்களை தற்காத்துக் கொள்கின்றனா்.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் காப்பீடு செய்கிற விவசாயிகளுக்கு இழப்பீடு கூட பெற்றுத் தருவதில்லை. பேரிடா் மேலாண்மை நிதியும் கூட அறிவிப்புடன் நின்று விடுகிறது. இதுவரையிலும் பாதிக்கப்படுகிற விவசாயிகளுக்கு எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை.
ஜெயரஞ்சனின் கூற்று உண்மையாக இருக்குமேயானால் கிராமங்கள்தோறும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட பட்டியலை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
மாறாக உண்மைக்குப் புறம்பாக விவசாயத்துக்கு எதிரான கருத்துக்களை திட்டக் குழு துணைத் தலைவா் மூலம் பேச வைப்பது தோ்தல் களத்தில் வெளிப்படையாக விவாதங்களுக்கு உள்ளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

