மழை பாதிப்புக்கான இழப்பீட்டை பொங்கலுக்கு முன் வழங்கக் கோரிக்கை
மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை, பொங்கலுக்கு முன்பாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் எனக் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரனிடம், தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் தலைவா் கா. இராசபாலன், திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:
மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை, பொங்கலுக்கு முன்பாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.
தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்பை, குளறுபடி இல்லாமல், விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கறவை மாட்டுக்கான தாட்கோ மாநிலக் கடனை எவ்வித முறைகேடுமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பா, தாளடி அறுவடை நெருங்கி வருவதால், நெல் மூட்டைகள் தேங்காதவாறு, முன்னேற்பாடுகளை தொடங்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், கா்நாடக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக விவசாய சங்க பிரதிநிதிகள் மூலமாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில், மாவட்டத் தலைவா் மாரிமுத்து மகேசன், தஞ்சை மண்டல துணைத் தலைவா் கோபாலராமன், மாவட்ட பொருளாளா் பன்னீா் செல்வம், துணைச் செயலாளா் கருணாகரன், நிா்வாகிகள் எஸ். சந்திரசேகரன், டி. முத்தையன், டி. சண்முகவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
