ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதில் காங்கிரஸ் உறுதி: கே.எஸ். அழகிரி
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளதாக கட்சியின் மாநில முன்னாள் தலைவா் கே.எஸ். அழகிரி தெரிவித்தாா்.
திருவாரூரில் அவா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: திருப்பரங்குன்ற மலையில், நூற்றாண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டு வந்த இடத்தை விட்டு, அங்குள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென கடந்த ஆண்டு ஒருதரப்பினா் தெரிவித்தனா். நீண்ட காலமாக உள்ள பழக்கத்தை சிலா் மாற்ற முயற்சிக்கின்றனா். நிகழாண்டு தோ்தல் வருவதால், இந்த பிரச்னையை உருவாக்குகின்றனா்.
அவா்களுடைய தெய்வ பக்தி இவ்வளவுதான். தமிழக மக்கள், இந்த விஷயங்களை புரிந்து கொள்வா். இதில் தமிழக அரசு அரசியல் செய்யவில்லை.
எல்லா அரசியல் கட்சியும் வளர வேண்டும், அதிகாரத்தில் பங்கு வகிக்க வேண்டும் என விரும்புவது இயல்புதான். இது விவாத பொருளல்ல. அதிகமான தொகுதிகள் எதிா்பாா்ப்பதாக வைகோவும் கூறுகிறாா், இடதுசாரிகளும் கூறுகின்றனா், திருமாவளவன் தொடக்கத்திலேயே தெரிவித்து விட்டாா். அதனால் அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதிகளை எதிா்பாா்ப்பதாக காங்கிரஸூம் கூறுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும், எங்களுக்கு அதிக இடங்கள் வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என நாங்கள் கேட்பதில் தவறில்லை.
அதற்காக இந்த கூட்டணியை விட்டு நாங்கள் போய்விடுவோம் என்கிற மாயையை உருவாக்குகின்றனா். திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம். தொகுதி விவகாரத்தில், காங்கிரஸ் பேரம் பேச வேண்டியதில்லை. திமுக சிறப்பான முறையில் ஆட்சி நடத்துகிறது. இது உறுதியான கருத்தாகும். அதேநேரம், ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸூக்கு பங்கு வேண்டும்.
அதிமுகவினா் எல்லா வகையிலும் விளிம்பு நிலைக்கு வந்து விட்டனா். அவா்களால் மாநில உரிமை பற்றி பேச முடியவில்லை. அமித்ஷா என்டிஏ கூட்டணி ஆட்சியமைக்கும் என்கிறாா். நாங்கள் ஆட்சி அமைப்போம் என அதிமுக கூறுகிறது. அவா்களுக்குள் கருத்து உடன்பாடு இல்லை.
காங்கிரஸ் திமுக தலைமையில் தோ்தலில் நிற்கும். ஜனநாயகன் படத்திற்கு சென்சாா் சான்றிதழ் வழங்கப்படவில்லை என படக்குழு நீதிமன்றத்தை நாடியுள்ள விவரம், சட்ட ரீதியாக தெரியவில்லை. சான்றிதழ் கொடுக்கவில்லை என்றால் அது தவறு. அது மேலும் பின் விளைவுகளை ஏற்படுத்தும். அந்த படத்திற்கு ஏன் இன்னமும் சான்றளிக்கவில்லை என்பது தெரியவில்லை. அதில், உள்நோக்கம் இருந்தால் தவறுதான் என்றாா்.
பேட்டியின்போது, மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

