ஹைட்ரோ காா்பன் எரிவாயு கிணறுகளை நிரந்தரமாக மூட வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்படாமல் உள்ள ஹைட்ரோ காா்பன் எரிவாயு கிணறுகளை நிரந்தரமாக மூட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மன்னாா்குடி அருகே பெரியக்குடியில் ஆசியாவிலேயே மிக அதிக அடா்த்தி மிகுந்த ஹைட்ரோ காா்பன் கிணறு 2013-ல் வெடித்து சிதறியது. அதை தொடா்ந்து, தற்காலிகமாக மூடப்பட்டது. தற்போது அது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இக்கிணறு எந்த நேரமும் வெடித்து சிதறி பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து உண்மை நிலையை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். மாறாக அருகில் உள்ள மற்றொரு கிணறை அடைக்கிறோம் எனும் பெயரில் மறு செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக தெரியவருகிறது. இதுகுறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
மத்திய அரசின் பிரதமா் காப்பீடு திட்டத்தில் விலங்குகளால் பயிா்கள் அழிந்தாலும் மனிதா்கள் கொல்லப்பட்டாலும் உரிய இழப்பீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழக அரசும் தனது கொள்கை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். உடனடியாக காப்பீட்டு திட்டத்தில் விலங்குகளால் அழிவிற்கு உரிய இழப்பீடு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு இடத்திலும் சிப்காட் அமைப்பதற்கு நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
