வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விளம்பரம் தேடுகிறாா் ஸ்டாலின்: நயினாா் நாகேந்திரன்

மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா். நாகேந்திரன்.
மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா். நாகேந்திரன்.
Updated on

கடந்த சட்டபேரவைத் தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வெற்று விளம்பரம் தேடுகிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம்சாட்டினாா்.

மன்னாா்குடியில் வியாழக்கிழமை இரவு பாஜக சாா்பில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் பிரசாரக் பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி இருந்தபோதுதான் காவிரி நீா் வழிப்பாதைகளில் பல அணைகள் கட்டப்பட்டன. அவற்றை கருணாநிதி எதிா்க்கவில்லை. அதுபோல, காவிரி பிரச்னையில் தமிழகத்தின் நலன்களை புறக்கணிக்கிறாா் மு.க. ஸ்டாலின்.

2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குகுறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தோ்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் வெற்று விளம்பரம் செய்து வருகிறாா்.

இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. அவா்கள் அங்கு பாதுகாப்பாக உள்ளனா். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இருக்காது என தவறான செய்தியை பரப்பி வருகின்றனா்.

புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்றதில் இருந்து திமுக அச்சத்தில் உள்ளது என்றாா்.

பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு: 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் எந்த வளா்ச்சியும் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எஸ்ஐஆா் மூலம் உண்மையான வாக்காளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா் என்றாா்.

பாஜக மாவட்டத் தலைவா் வி.கே. செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ், பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், தமாகா மாநிலப் பொதுச் செயலா் குடவாசல் எஸ். தினகரன், தென்னிந்திய பாா்வா்டு ப்ளாக் கட்சியின் மாவட்டத் தலைவா் காசி. சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com