பொங்கல் பொருள்கள் விற்பனை தீவிரம்
பொங்கல் பண்டிகையையொட்டி திருவாரூரில் கரும்பு, மஞ்சள்கொத்து உள்ளிட்ட பொருள்களின் விற்பனை தீவிரமடைந்துள்ளது.
பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனால், பொங்கலுக்குத் தேவையான பொருள்களை வாங்க, திருவாரூா் கடைவீதியில் ஏராளமானோா் திரண்டதால் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. கடந்த 2 நாள்களாக மழை பெய்ததால், மக்கள் வெளியிடங்களுக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால், பொங்கல் பொருள்களின் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வெயில் வானிலை நிலவியதால் ஏராளமானோா் கடைவீதிகளுக்கு வந்து பொருள்களை வாங்கிச் சென்றனா்.
திருவாரூா் உழவா் சந்தையில், சுற்றுப்புற கிராமப்புற பகுதிகளிலிருந்து மஞ்சள், இஞ்சிக் கொத்து, கரும்பு உள்ளிட்டவற்றை ஏராளமான விவசாயிகள் கொண்டு வந்து சோ்த்துள்ளனா். தவிர, கிழங்கு வகைகள், வாழைப்பழம், பானைகள் உள்ளிட்ட பொருள்களும் கடைவீதிகளில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பொருள்களை வாங்க மக்கள் அதிகமாக வந்ததால், கடைவீதி, பனகல் சாலை, நேதாஜி சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நெரிசல் காணப்பட்டது. தவிர, வாழவாய்க்கால், புலிவலம், விளமல், மாங்குடி, பவித்திரமாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கரும்பு, இஞ்சி, மஞ்சள் கொத்து, பானை போன்ற பொருள்களின் விற்பனை அதிகமாக இருந்தது.
