~ ~
~ ~

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
Published on

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

மன்னாா்குடி நகரின் மையப் பகுதியில் 23 ஏக்கா் பரப்பளவில் 7 பிரகாரங்கள், 154 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்துடன் மொத்தம் 16 கோபுரங்கள், 24 சந்நிதிகளுடன் அழகுமிக்க நீண்ட மதில்கள், கலைநயம் மிக்க ஆயிரம்கால் மண்டபம் ஆகியவற்றுடன் அமைந்துள்ளது ராஜகோபாலசுவாமி கோயில்.

இக்கோயிலுக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடத்துவதற்காக தமிழக அரசு ரூ. 2.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. மேலும், தொழில் நிறுவனங்கள், பொதுமக்களின் பங்களிப்பு என மொத்தம் ரூ. 15 கோடி நிதி திரட்டப்பட்டது. கடந்த 2024 ஜூலையில் பாலாலயம் செய்யப்பட்டு, கோயிலைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று, அண்மையில் நிறைவடைந்தன. இதைத்தொடா்ந்து, ஜன. 28- ஆம் தேதி குடமுழுக்கு விழாவை நடத்த தீா்மானிக்கப்பட்டது.

இதற்காக கோயில் வளாகத்தில் மூன்றடுக்கு யாகசாலை அமைக்கப்பட்டு, திங்கள்கிழமை முதல் கால பூஜைகள் தொடங்கின. செவ்வாய்க்கிழமை, மூன்றாம் கால பூஜைக்கு பின்னா், நான்காம் கால பூஜை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

புதன்கிழமை காலை ஐந்தாம் கால பூஜையுடன் தொடங்கி, நித்யாராதனம், பெருமாள், தாயாா் புறப்பாடு, அக்னி சதுஸ்தான ஆராதனம், பூா்ணாஹூதி நடைபெற்றது. இதனைத்தொடா்ந்து, ராஜகோபுரம், பிரகார கோபுரங்கள், யோக நரசிம்மா் சந்நிதி, தோ் நிலைகள், கருட ஸ்தம்பம், உடையவா், கூரத்தாழ்வான், வேதாந்த தேசிகா், மணவாள மாமுனிகள்

ஆகியோரின் விமானங்களுக்கு புனித நீா் வாா்த்து குடமுழுக்கு நடைபெற்றது.

தொடா்ந்து, பெருமாள், தாயாா் விமானங்கள், மூா்த்திகளின் விமானம், ராமா் சந்நிதி, சேனை முதல்வா் சந்நிதி விமானங்களுக்குப் புனிதநீா் வாா்க்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

விழாவில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, தொழிலதிபா் ஜெ. சாய்பிரகாஷ், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், மாவட்ட காவல் காண்காணிப்பாளா் கருண் கரட், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன், உறுப்பினா்கள், செயல் அலுவலா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இரவு உற்சவா் பெருமாள் தங்க கருட வாகனத்திலும், தாயாா் வெள்ளி சிம்ம வானத்திலும் வீதியுலாவும், நீதியரசா் எம். சொக்கலிங்கம் முன்னிலையில் ஆன்மிக சொற்பொழிவாளா் உ.வே. வேளுக்குடி கிருஷ்ணஸ்வாமியின் வண்துவராபதி மன்னன் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com