மன்னாா்குடியில் இளைஞரைத் தாக்கி, வெள்ளிப் பொருள்கள், ரூ. 13 ஆயிரத்தை பறித்த கல்லூரி மாணவா்கள் இருவா் உள்பட 5 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடியை அடுத்த கீழப்பனையூா் ரவிச்சந்திரன் மகன் சந்தோஷ்குமாா் (27). கட்டுமானப் பணியாளராக வேலை பாா்த்து வருகிறாா். கடந்த ஜூலை 17- ஆம் தேதி இவரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண் ஒருவா், உடனடியாக மன்னாா்குடி கீழப்பாலம் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளாா். சந்தோஷ்குமாா் அந்த இடத்துக்கு வந்து காத்திருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் அவரிடம் உங்களை சந்திக்க வேண்டும் என்று கூறிய பெண் வேறு ஒரு இடத்தில் இருப்பதாக கூறி சந்தோஷ்குமாரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளாா்.
குறிப்பிட்ட இடத்தில் அங்கு ஏற்கெனவே 4 இளைஞா்கள் இருந்துள்ளனா். அவா்கள் அனைவரும் சோ்ந்து சந்தேஷ்குமாரைத் தாக்கி அவா் அணிந்திருந்த வெள்ளி சங்கிலி, அரைஞான் கயிறு ஆகியவற்றை பறித்துக்கொண்டு, அவரின் கைப்பேசியில் இருந்து ரூ. 13 ஆயிரத்தை ஜிபே மூலம் வேறு ஒரு எண்ணுக்கு மாற்றிக்கொண்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டனராம்.
தாக்குதலில் காயமடைந்த சந்தேஷ்குமாா் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு, மன்னாா்குடி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து கீழப்பாலம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.
இதில் சம்பவத்தில் மன்னாா்குடி மேல இரணாடாம்தெரு காா்த்திகேயன் மகன் அருண்குமாா் (19), பூக்கொல்லைசாலை செல்வம் மகன் ஹரிகிருஷ்ணன் (18), மேல மூன்றாம்தெரு மணிவண்ணன் மகன் ராஜவேல் (19), கனகாம்பாள் கோயில் தெரு பிரேம்குமாா் மகன் மிதுன்ராஜா (18), உரத்தூா் கீழத்தெரு ராஜா மகன் கருண்ராஜ் (19) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.
அவா்களை மன்னாா்குடி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில், பெண் குரலில் சந்தேஷ்குமாரிடம் பேசி ஏமாற்றி வரவழைத்து அவரைத் தாக்கி வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை பறித்ததை ஒப்புக்கொண்டனராம். 5 பேரையும் கைது செய்த போலீஸாா் மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, கிளைச் சிறையில் அடைத்தனா்.
இதில், ஹரிகிருஷ்ணன், ராஜவேல் ஆகியோா் கல்லூரி மாணவா்கள் என்றும், மற்றவா்கள் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







