குர்காவ்னில் "பிராணப் பிரதிஷ்டை'

பக்தர்களின் பக்தி இசை முழக்கத்துடன் குர்காவ்ன் ஸ்ரீ சித்தி கணேச மந்திரில் எழுந்தருளியுள்ள நான்கு தெய்வங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிராணப் பிரதிஷ்டை விழா சிறப்பாக நடைபெற்றது.  ஹரியாணா மாநிலம், குர்காவ்ன்
Updated on
2 min read

பக்தர்களின் பக்தி இசை முழக்கத்துடன் குர்காவ்ன் ஸ்ரீ சித்தி கணேச மந்திரில் எழுந்தருளியுள்ள நான்கு தெய்வங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிராணப் பிரதிஷ்டை விழா சிறப்பாக நடைபெற்றது.

 ஹரியாணா மாநிலம், குர்காவ்ன் டி.எல்.எஃப். 4 பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சித்தி கணேச மந்திர். ஸ்ரீ ஏகம்பரேஸ்வரர், ஸ்ரீ சித்தி கணேசர், ஸ்ரீ தேவி காமாட்சி ஆகிய தெய்வங்களைப் பிரதானமாகக் கொண்டுள்ளது இக்கோவில்.

 இங்கு தமிழ்க் கடவுளான ஸ்ரீ முருகன், மலையாள மக்களின் மனம்கவரும் தெய்வங்களான ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ குருவாயூரப்பன், அனைவரும் விரும்பும் ஸ்ரீ ஆஞ்சநேயர் கடவுள் ஆகியோருக்கு தனிச் சந்நிதிகள் இல்லாத குறை இருந்து வந்தது.

 இதை நிவர்த்திக்கும் வகையில் இத்தெய்வங்களுக்கான சன்னதிகள் அமைக்கும் பணிகள் கோவில் வளாகத்தில் சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

 தனித்தனிச் சந்நிதிகள்

 மேற்கண்ட நான்கு தெய்வங்களுக்கும் தனித்தனிச் சந்நிதிகள் அமைக்கப்பட்டன. சென்னையைச் சேர்ந்த சில்ப கலா நிலையத்தினர் சிலைகளை வடித்தெடுத்தனர்.

 புதிதாக அமைக்கப்பட்டிருந்த சிலைகளில் தெய்வ சக்தியை ஏற்படுத்துவதற்காக "பிராணப் பிரதிஷ்டை' நிகழ்ச்சி நடத்த முடிவுசெய்யப்பட்டது.

 ஸ்ரீ குருவாயூரப்பன், ஸ்ரீ முருகன், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்குப் பிராணப் பிரதிஷ்டை விழா சனிக்கிழமை காலை தொடங்கியது.

 ஆர்.பி. அனந்தநாராயணன் சாஸ்திரிகள் தலைமையில் கே. ராமகிருஷ்ணன் சாஸ்திரிகள், கே.வி. சீதாராமன் சாஸ்திரிகள் உள்பட 20 பேர் கொண்ட குழுவினர் யாகசாலை மண்டபம் அமைத்து பல்வேறு பூஜைகளை மேற்கொண்டனர்.

 தொடக்கமாக அஷ்ட திரவிய கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, யாகசாலை மண்டப பிரவேசம், யாகசாலை பூஜைகள் ஆகியவை நடைபெற்றன.

 ஸ்ரீ பாலதண்டபாணி ஜபம், ஸ்ரீ ஆஞ்சநேய ஜபம் ஆகியவையும், தத்துவ ஹோமங்களும், சாயாநதி வாசம் பூஜையும் நடத்தப்பட்டன.

 ஞாயிற்றுக்கிழமை காலை ஆலயத்தில் ஏற்கெனவே உள்ள ஸ்ரீ கணேசர், ஸ்ரீ ஏம்பரேஸ்வரர், ஸ்ரீ தேவி காமாட்சி, நவக்கிரகங்களுக்கு சம்வத்சர உத்சவ ஜப ஹோமம் நடைபெற்றது.

 பின்னர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெய்வங்களுக்குப் பிம்ப சுத்தி, நேத்ர உம்மினம், யோக நித்திரை, பரிவார சுத்தி, நாமகரணம், தூப, தீப உபசாரங்கள் நடத்தப்பட்டன.

 காலை 10.45 மணி முதல் 12.30 மணி வரை புதிதாக அமைந்துள்ள ஸ்ரீ குருவாயூரப்பன், ஸ்ரீ கார்த்திகேயன், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களின் திவ்ய தரிசன நிகழ்ச்சியும், சோடஷ உபசார பூஜையும், நைவேத்தியம், மகா தீபாராதனை நடைபெற்றன.

 மனம் உருகிய பக்தர்கள்

 இந்த விழாவில் குர்காவ்ன், தில்லியின் பிற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஆண், பெண் பக்தர்கள் பலரும் ஸ்ரீ முருகன், ஸ்ரீ ஐயப்பன், விஷ்ணு போன்ற தெய்வங்களின் நாமவளியை மனம் உருகப் பாடினர்.

 கொட்டுமேளம், நாகஸ்வரம், மணியோசை சேர்ந்த பக்தி இசை மழையில் நான்கு தெய்வங்களின் திவ்ய தரிசனத்தைப் பக்தர்கள் மனம் குளிர கண்டுகளித்தனர். அடுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிறைவாக பிரசாத விநியோகமும் இடம்பெற்றது.

 இந்த விழாவில் தலைவர் எஸ். ரத்தினம், துணைத் தலைவர் சஞ்சய் குப்தா, பொருளாளர் வி. கோபாலகிருஷ்ணன், இணைப் பொருளாளர் கீதா பாலா, உறுப்பினர்கள் எஸ். சுப்பிரமணியன், எம்.சி. ஜெயராமன், டி.ஆர். பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாலையில் பக்திப் பாடல்கள், பஜனை நிகழ்ச்சியை புது தில்லி ஸ்ரீ ஐயப்பா சங்கத்தினர் நடத்தினர்.

 பிராணப் பிரதிஷ்டை ஏன்?

 பொதுவாக கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், பிராணப் பிரதிஷ்டை ஏன் நடத்தப்பட வேண்டும்?

 இது குறித்து விளக்குகிறார் கே.பி. அனந்த நாராயணன் சாஸ்திரிகள்:

 ""புதிதாகப் பாலாயம் செய்யப்பட்டு கட்டப்படும் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுவதுண்டு. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம். ஏற்கெனவே உள்ள தெய்வங்கள் தவிர புதிதாக அமைக்கப்பட்டு தெய்வங்களுக்குச் செய்யப்படுவது பிராணப் பிரதிஷ்டை ஆகும்.

 தெய்வத் திருவுருவத்தைக் கல்லில் வடித்தெடுக்கும் பணி சிற்பக் கலைஞருடையது. அத்துடன் அவரது பணி முடிந்துவிடுகிறது. அதன் பிறகு அச்சிலைக்கு மந்திர உச்சாடனம், பூஜைகள் செய்து சக்தி கொடுப்பதே பிராணப் பிரதிஷ்டை.

 அதாவது "பிராண' என்றால் சக்தி அல்லது உயிர். பிரதிஷ்டை என்றால் கொடுப்பது. அந்தத் தத்துவத்தின்படி தெய்வச் சிலைக்கு உயிர் கொடுப்பது என்பதாகிறது. இதற்காகப் பலவித ஹோமங்கள், பூஜைகள் நடத்தப்படும்.

 உலக உயிர்களுக்கெல்லாம் உயிர் கொடுக்கும் இறைவனுக்கு நாம் உயிர் கொடுக்க முடியுமா? என்ற கேள்வி இங்கு எழக்கூடும். நிச்சயமாக முடியாது. ஆனாலும், தெய்வத் திருவுருவம் தாங்கியுள்ள சிலைக்குச் சக்தியை ஏற்படுத்துவதுதான் பிராணப் பிரதிஷ்டையின் நோக்கம்.

 குழந்தை போன்று இறைவனைப் பாவித்து பலவித பூஜைகள் நடத்தப்படுகின்றன. பிராணப் பிரதிஷ்டை முடிந்து 48 நாள்களுக்குத் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். 48-வது நாளில் மண்டலாபிஷேகம் நடத்தப்படும். அப்போது, முழுமையான தெய்வ சக்தி சிலைக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை'' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com