புது தில்லி, ஜூன் 8: தமிழ்நாட்டில் ஜூலை மாதம் முதல் கூடுதலாக ஒரு சிறப்பு ரயிலும் இரண்டு ரயில்களின் பயண தூரமும் நீட்டிக்கப்படுகிறது.
இது குறித்து ரயில்வே துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு மற்றும் திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே துறைத் திட்டங்கள் குறித்து தில்லியில் ரயில்வே வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அதைத் தொடர்ந்து ஒரு சிறப்பு ரயில் சேவையும் இரண்டு ரயில்களின் பயண தூரமும் நீட்டிக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில் சேவை: ஜூலை 3-ம் தேதியில் இருந்து மன்னார்குடி-திருப்பதி விரைவு ரயில் காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் துறைமுகம் சந்திப்பு, சிதம்பரம், சீர்காழி, பேரளம், திருவாரூர், நீடாமங்கலம், வழியாக இரவு 10.35 மணிக்கு மன்னார்குடி வந்தடையும். வாரத்தில் மூன்று நாள்கள் இயக்கப்படும் இந்த ரயில் மன்னார்குடியில் இருந்து புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாள்களில் அதிகாலை 5.30 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும்.
இந்த ரயில், செவ்வாய், வியாழன், சனிக்கிழமை ஆகிய நாள்களில் மன்னார்குடி வந்தடையும்.
நீட்டிக்கப்படும் ரயில் சேவைகள்: ஜூலை 1-ம் தேதி முதல் பெங்களூர்-சேலம் இடையே தினசரி பயணிகள் ரயில் நாகூர் வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த ரயில் ஆத்தூர், விருத்தாசலம், வடலூர், கடலூர் துறைமுகம் சந்திப்பு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, நன்னிலம், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக நாகூருக்கு இரவு 10.40 மணிக்கு வரும். நாகூரில் இருந்து தினமும் இந்த ரயில் அதிகாலை நான்கு மணிக்கு பெங்களூருக்குப் புறப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும் விரைவு ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும். அங்கிருந்து ரயில் காரைக்கால் வரை நீóட்டிக்கப்படும்.
இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து பேரளம், நன்னிலம், திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர் வழியாக காலை 7.45 மணிக்கு காரைக்கால் சென்றடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.