தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள்
By புது தில்லி, | Published On : 02nd April 2013 12:59 AM | Last Updated : 02nd April 2013 12:59 AM | அ+அ அ- |

தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள்-2013' வழங்கும் விழா இம்மாதம் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு தில்லிச் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.
முதல் முறையாக சிறந்த தமிழ் எழுத்தாளர், தமிழ்ப் பேச்சாளர், தமிழ்க் கவிஞர் உள்ளிட்ட பல பிரிவுகளில் தில்லித் தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், பத்ம விருது பெறுவோருக்கு பாராட்டு விழாவும் நடைபெற உள்ளது.
விழாவில் சிறப்பு விருந்தினராக "தினமணி" ஆசிரியர் கே. வைத்தியநாதன் கலந்துகொண்டு, விருதுகளை வழங்கியும், பத்ம விருது பெற்றோரை பாராட்டியும் பேசுகிறார்.
சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான "அமரர் ஏ.ஆர். ராஜாமணி விருது' திருப்பூர் கிருஷ்ணனுக்கும், சிறந்த தமிழ்ப் பேச்சாளருக்கான "குமரி அனந்தன் விருது'
பேராசிரியர் கு. ஞானசம்பந்தனுக்கும் வழங்கப்பட உள்ளது.
சிறந்த தமிழ்க் கவிஞருக்கான "கவியரசு கண்ணதாசன் விருது' கவிஞர் ஜெயாபாஸ்கரனுக்கும், சிறந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளருக்கான "அமரர் சுஜாதா விருது' எம்.ஏ. சுசீலாவுக்கும், "சிறந்த தமிழ் ஆர்வலருக்கான விருது" சிந்துகவி மா. சேதுராமலிங்கத்திற்கும் வழங்கப்பட உள்ளது.
சிறந்த நடனக் கலைஞருக்கான விருதை "பத்மபூஷண்' சரோஜா வைத்தியநாதன், பத்மா சம்பத்குமார் ஆகியோரும், சிறந்த வாத்தியக் கலைஞர்களுக்கான விருதை வி.எஸ்.கே. சக்ரபாணி (வயலின்), கும்பகோணம் என். பத்மநாபன் (மிருதங்கம்) ஆகியோரும், சிறந்த தமிழிசைப் பாடகருக்கான விருதை அகிலா கிருஷ்ணனும் பெற உள்ளனர்.