சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக்கும் நடவடிக்கைக்கு நிதியுதவி கேட்டு தமிழக அரசிடம் இருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
"இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 348 (2) விதியின்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்த தமிழக அரசு தெரிவித்த ஒப்புதல் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதா? அப்படியென்றால் வழக்குகளின் ஆவணங்கள், தீர்ப்புகளை மொழியாக்கம் செய்ய தமிழக அரசுக்கு ஆகும் செலவினத்துக்கு மத்திய அரசு ஏதேனும் நிதியுதவி வழங்கியதா?' என்று தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கேள்வி எழுப்பியிருந்தார்.
அந்தக் கேள்விகளுக்கு ரவிசங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது: "சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்த உயர் நீதிமன்றம் கொள்கை அளவில் ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆகவே, இந்திய அரியலமைப்புச் சட்டம் 348 (2) விதியின்படி தமிழை நீதிமன்ற மொழியாக பயன்படுத்த குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தரும்படி தமிழக அரசு கோரியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 229 (3) விதியின்படி உயர் நீதிமன்றங்களின் நிர்வாகச் செலவினங்களை அந்தந்த மாநில அரசுகளே ஏற்க வேண்டும். இதுவரை உயர் நீதிமன்ற செலவினத்துக்கு நிதியுதவி கேட்டு தமிழக அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு எவ்வித கோரிக்கையும் வரவில்லை' என்று ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
பின்னணி: தமிழ்நாட்டில் 2006-ஆம் ஆண்டில் திமுக தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்த போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை நீதிமன்ற மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அப்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி. ஷா "உயர் நீதிமன்றத்தில் தமிழை நீதிமன்ற மொழியாக பயன்படுத்த கொள்கை அளவில் அனுமதிக்கிறோம். ஆனால், அதற்குரிய அனுமதியை முறைப்படி குடியரசுத் தலைவரிடம் இருந்து மாநில அரசு பெற வேண்டும்' என்றார்.
அதைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை பற்றி ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட மூவர் குழு "உயர் நீதிமன்றங்களில் வேறு மாநிலங்களிலிருந்து மாற்றலாகி வரும் நீதிபதிகள், வழக்குகளில் ஆஜராகும் வேறு மாநில வழக்குரைஞர்கள் ஆகியோரின் வசதிக்காக தமிழில் வெளியாகும் தீர்ப்பு, வழக்கு ஆவணங்கள் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய வேண்டும். அதற்குரிய செலவினத்தை ஒதுக்கி, மொழியாக்கம் செய்த பிறகே தமிழை நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்று யோசனை கூறியிருந்தது.
இதையடுத்து, மொழியாக்கம் செய்ய சுமார் ரூ.20 கோடி வரை தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டது. அதன் மீது திமுக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், தமிழகத்தில் 2011-இல் ஆட்சிக்கு வந்த அதிமுக தலைமையிலான அரசு, நீதிமன்ற மொழியாக தமிழை அறிவிக்கக் அனுமதி கோரி மத்திய சட்டத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.