பாதுகாப்புக்கு உறுதி அளித்த பின்பும் 3-வது நாளாக தொடரும் அரசு மருத்துவர்கள் போராட்டம்

தில்லி அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உறுதியளித்தார்.
Updated on
1 min read

தில்லி அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உறுதியளித்தார். எனினும், தில்லி அரசு உள்ளுறை மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை மூன்றாவது நாளை எட்டியது.
தில்லி லோக் நாயக் மருத்துவமனை மருத்துவர்கள் இருவர் மீது நோயாளிகளின் உறவினர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரியும் மௌலானா ஆசாத் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 மேலும், அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை எச்சரித்திருந்தது.
இந்நிலையில், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பது தொடர்பாக அமைச்சர் சத்யேந்தர் ஜெயனுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் பிரதிநிதிகள், மௌலானா மருத்துவ கல்லூரியின் டீன், லோக் நாயக் மருத்துவமனை இயக்குநர் ஆகியோர் புதன்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, நோயாளிகளுடன் வரவேண்டிய உறவினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் உரிய உத்தரவை தில்லி தலைமைச் செயலகம் வாயிலாக அறிவிக்கப்பட வேண்டும். மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலருக்கு சத்யேந்தர் ஜெயின் உத்தரவிட்டிருந்தார்.
எனினும், லோக் நாயக் மருத்துவமனை உள்ளுறை மருத்துவர்கள் வியாழக்கிழமையும் தங்களது வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அவசர சிகிச்சை பிரிவும், புறநோயாளிகள் பிரிவும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
 இதுகுறித்து லோக் நாயக் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் பஸ்ஸை கூறுகையில், "உள்ளுறை மருத்துவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அளித்த வாக்குறுதிகளுக்கு அத்துறை செயலரிடம் ஒப்புதல் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க பாதுகாவலர்கள் அதிகரிக்கப்படுவார்கள். சிசிடிவி கேராக்கள் அமைக்கும் பணி விரைவுப்படுத்தப்படும்' என்றார்.
இதேபோல், மத்திய அரசால் நடத்தப்படும் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் பணியாற்றும் உள்ளுறை மருத்துவர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் வியாழக்கிழமை இரண்டாவது நாளை எட்டியது. 
இந்த மருத்துவமனையில் நிர்வாக குறைபாடுகளைக் காரணம் காட்டி, மருத்துவ உயர் படிப்புகளில் 30 இடங்கள் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாகவும் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com