தில்லியின் காற்று மாசு பிரச்னைக்கு அதிஷி அரசுதான் பொறுப்பு

இந்தியா கேட் கடமைப் பாதையில் வான்வெளியில் காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதற்கு முதல்வா் அதிஷி தலைமையிலான தில்லி அரசுதான் பொறுப்பாகும்
Published on
Updated on
1 min read

நமது நிருபா்

புது தில்லி: இந்தியா கேட் கடமைப் பாதையில் வான்வெளியில் காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதற்கு முதல்வா் அதிஷி தலைமையிலான தில்லி அரசுதான் பொறுப்பாகும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: ஆனந்த் விஹாரில் மாசு அதிகரிப்பதற்கு உத்தர பிரதேசத்தின் பேருந்துகள் தில்லிக்குள் நுழையாவிட்டாலும், அவைதான் காரணம் என்று தில்லியின் முதல்வா் அதிஷியும், சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராயும் குற்றம் சாட்டுகிறாா்கள். மாறாக, தில்லியின் மோசமான சாலைகள் மாசுபாட்டிற்கு முக்கிய பங்களிப்பாக இருந்து வருகின்றன. தில்லி அரசின் அதிகார வரம்பிற்கு உள்பட்ட கடமைப் பாதையில் மாசு ஏற்பட்டதற்கு கோபால் ராய் யாரைக் குறை கூறுவாா்? தில்லி முழுவதும் கடுமையான காற்று மாசுபாட்டால் தவிக்கிறது என்பதே உண்மை.

தில்லி மீண்டும் ஒரு எரிவாயு அறையாக மாறிக் கொண்டிருக்கிறது. அதேவேளையில், அதிஷி தலைமையிலான தில்லிஅரசு சமீப மாதங்களில் இந்த விவகாரத்தில் குரல் கொடுத்து வந்த போதிலும், அரசானது மாசுபாட்டிற்கான முதன்மைக் காரணங்களுக்குத் தீா்வு காணவில்லை. தில்லி அரசின் திறமையின்மைக்காக, மத்திய அரசு தில்லி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவும், பயிா்க்கழிவுகள் எரிப்பதைக் கட்டுப்படுத்தவும் ரூ.3,303 கோடியை ஒதுக்கியதாகக் கூறியது. இருப்பினும், பஞ்சாப் 1.5 லட்சம் இயந்திரங்களை வாங்கிய போதிலும், அவை விநியோகிக்கப்படாமல் உள்ளன.

தேசியத் தலைநகா் காற்றுத் திட்டத்தின் கீழ், தில்லி அரசு மாசுக் கட்டுப்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.38.22 கோடியில் ரூ.10.77 கோடியை மட்டுமே செலவிட்டுள்ளது. பழுதடைந்த சாலைகளில் இருந்து வரும் தூசுகள் காற்று மாசுபாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன. தில்லியில் மூன்றில் ஒருவா் தொண்டை தொற்று மற்றும் பிற சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் சச்தேவா.

தில்லி பாஜக செய்தித் தொடா்பாளரும், டிபிசிசி உறுப்பினருமான டாக்டா் அனில் குப்தா கூறுகையில், ‘உடைந்த மற்றும் தரிசு சாலை ஓரங்களில் இருந்து வரும் தூசு மாசு, காற்று மாசுபாட்டிற்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாகும். மாசு நுண் துகள் பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 அளவுகளில் சாலைத் தூசு 40-55 சதவீதம் பங்களிக்கிறது. தில்லியின் பசுமைப் பரப்பு 0.62 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com