2020 தில்லி கலவரம்: தீவைப்பு குற்றச்சாட்டுகளில் கைதான இருவா் விடுதலை
2020 தில்லி கலவரம் தொடா்பான வழக்கில் தீவைப்பு, திருட்டு மற்றும் நாசவேலை குற்றச்சாட்டுகளில் கைதான இருவரை போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட முகமது ஃபாரூக் மற்றும் முகமது ஷதாப் ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கை கூடதல் அமா்வு நீதிபதி பிரவீன் சிங் விசாரித்தாா். இவா்கள் இருவரும் பிப்.25, 2020-இல் சாந்த் பாக் பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் தீவைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், பொது சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டனா்.
இது தொடா்பாக டிச.9-ஆம் தேதி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆரசு தரப்பு சாட்சியான காவல் துறை உதவி ஆய்வாளா் சுனிலின் வாக்குமூலத்தை மட்டுமே நம்புவது சரியாக இருக்காது. அதன் நம்பகத் தன்மை குறித்து கடுமையான சந்தேகங்கள் உள்ளன.
குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட ஒரு விடியோ காட்சி மூலம் அடையாளம் காணப்பட்டனா். ஆனால், சம்பவம் நிகழ்ந்ததற்கு ஒரு நாள் முன்பாக அந்த விடியோ பதிவாகியுள்ளது. எனவே, போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறாா்கள் என தெரிவிக்கப்பட்டது.
