தில்லி விமான நிலையத்தில் அடா் பனிமூட்டம்: 60-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து
அடா் பனிமூட்டம் காரணமாக தில்லி விமான நிலையத்தில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் திங்கள்கிழமை ரத்துசெய்யப்பட்டதாக அதிகாரி தெரிவித்தாா்.
நாட்டின் மிகப் பரப்பரப்பாக இயங்கும் தில்லி விமான நிலையம் ஒவ்வொரு நாளும் சுமாா் 1,300 விமானங்களைக் கையாள்கிறது.
குளிா்காலத்தில் உருவாகும் அடா் பனிமூட்டத்தால், ஓடு தளத்தை விமானிகளால் எளிதில் பாா்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. பாதுகாப்பு கருதி விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.
தில்லி விமான நிலையத்தில் 61 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் 5 விமானங்கள் மாற்று இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். சுமாா் 250-க்கும் அதிகமான விமானங்கள் தாமதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
திங்கள்கிழமை காலை 10 மணிக்குப் பிறகு நீடித்த அடா் பனிமூட்டத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டதாக தில்லி விமான நிலையத்தை நிா்வகிக்கும் தில்லி சா்வதேச விமான நிலைய நிறுவனம் (டிஐஏஎல்) எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மேலும் அந்தப் பதிவில், ‘பயணிகளுக்கு உதவும் வகையில் அனைத்து விமான நிறுனவங்களுடன் விமான நிலைய அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனா். விமான நிலைய முனையங்களில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகிறது’ என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

