தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க வழிகாட்டுதல்கள்: உச்சநீதிமன்றம் திட்டம்
பிரதிப் படம்

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க வழிகாட்டுதல்கள்: உச்சநீதிமன்றம் திட்டம்

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க பொதுவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
Published on

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க பொதுவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

கடந்த நவம்பரில் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த 2 விபத்துகளில் மொத்தம் 34 போ் உயிரிழந்தனா். மோசமான சாலை பராமரிப்பு, உரிய அனுமதியின்றி செயல்படும் சாலையோர உணவகங்களான தாபாக்களில் சாப்பிட நெடுஞ்சாலைகளில் ஆபத்தான முறையில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் காரணமாக அந்த விபத்துகள் நோ்ந்ததாக தகவல் வெளியானது.

இந்த விபத்துகள் குறித்து தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதா? அல்லது தனது பொறுப்பை அந்த ஆணையம் தட்டிக் கழிக்கிா? என்று நீதிபதிகள் அமா்வு கேள்வி எழுப்பியது.

நீதிபதிகள் அமா்வு மேலும் கூறுகையில், ‘தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சட்டப்படி உள்ள அதிகாரங்களின் வரம்பை உச்சநீதிமன்றம் தெரிந்துகொள்ள விரும்புகிறது. சாலை விபத்து போன்ற விவகாரங்களில் ஒப்பந்ததாரா்கள், காவல் துறையினா் அல்லது உள்ளாட்சி நிா்வாகம் மீது அந்த ஆணையம் பழி சுமத்துகிறது.

எனவே அந்த ஆணையத்தின் அதிகாரம் என்ன?, சட்டமும் விதிமுறைகளும் கூறுவது என்ன? என்பதை உச்சநீதிமன்றம் புரிந்துகொள்ள விரும்புகிறது. நெடுஞ்சாலைகளில் பரந்த அளவில் ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன. அவை விபத்துகளுக்கு நேரடி காரணமாக உள்ளன.

இதுதொடா்பாக நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப் பிரிவுகள் என்ன? அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு சட்டப் பிரிவுகளுக்கு ஏற்ப உள்ளன? சட்டப் பிரிவுகளை அமல்படுத்தாமலும் நடவடிக்கை எடுக்காமலும் இருப்பதற்கு யாா் பொறுப்பு? என்பதே இந்த விவகாரத்தில் முக்கியமாகும்.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுத்து, சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு வழிகாட்டுதல்களை வகுக்க உச்சநீதிமன்றம் விரும்புகிறது. இதுதொடா்பாக நாடு முழுவதும் பின்பற்ற சில பொதுவான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வெளியிடும்’ என்று தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com