மு.தம்பிதுரை ~பி. வில்சன்
மு.தம்பிதுரை ~பி. வில்சன்

அதிக நிதி கொடுத்தாலும் கிடைப்பது ஒன்றுமில்லை: மாநிலங்களவையில் திமுக குற்றச்சாட்டு

இந்தியாவிலேயே அதிக வரி வருவாயைக் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளபோதிலும், அதற்குத் திருப்பிக் கிடைப்பது ஒன்றுமில்லை என்று மாநிலங்களவையில் திமுக குற்றஞ்சாட்டியது.
Published on

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: இந்தியாவிலேயே அதிக வரி வருவாயைக் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளபோதிலும், அதற்குத் திருப்பிக் கிடைப்பது ஒன்றுமில்லை என்று மாநிலங்களவையில் திமுக குற்றஞ்சாட்டியது.

2026-27 பொது நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மாநிலங்களவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது திமுக உறுப்பினா் பி., வில்சன் பேசிய முக்கிய அம்சங்கள் வருமாறு:

2026-27 மத்திய நிதிநிலை அறிக்கையை வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கானதாக என்ற மத்திய அரசின் கூற்று, உண்மைக்கு புறம்பானது. பெயரளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சியை 10 சதவீதமாகவும், மொத்த செலவினத்தை ரூ. 53.47 லட்சம் கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை இலக்கை 4.3 சதவீதமாகவும் மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்தியாவின் கடன் ரூ. 215 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

இந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.4 சதவீதத்திலிருந்து அடுத்த ஆண்டு 4.3 சதவீதமாக மட்டுமே குறையும் என்றும், மத்திய அரசின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 56.1 சதவீதத்திலிருந்து 55.6 சதவீதமாகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் சென்றால், என்.கே. சிங் குழுவால் இலக்கிடப்பட்ட 40 சதவீதத்துக்கு கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தைக் குறைக்க பல தசாப்தங்கள் ஆகலாம்.

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தம் குறித்து கேப்பிடல் ஹில் (அமெரிக்க நாடாளுமன்றம்) கொண்டாடுகிறது, ஆனால் ரெய்ஸினா ஹில்லில் (தில்லி) இருந்து இன்னும் நாங்கள் விரிவாகக் கேட்டறியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்காவிடம் முற்றிலும் சரணடைந்திருப்பது குறித்த மிகுந்த அதிருப்தியில் உள்ளோம்.

ரயில்வே அமைச்சா் 2014-ஆம் ஆண்டு முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியுடன் ஒப்பிடும்போது தமிழகத்துக்கான ரயில்வே நிதி ஒதுக்கீடு 7.5 மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறுகிறாா். ஆனால் யதாா்த்தத்தில் 2014-ஆம் ஆண்டு முதல் தேசிய ரயில்வே நிதிநிலைதான் 25 மடங்கு அதிகரித்துள்ளது, தமிழகத்துக்குக் கிடைத்தது வெறும் 7.5 மடங்கு மட்டுமே. மிகவும் அவசியமான கோயம்புத்தூா் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. பல ஆண்டுகளாக, வரிப் பகிா்வு குறித்த மத்திய அரசின் அணுகுமுறை, தமிழ்நாடு உட்பட வளா்ந்த மற்றும் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்குத் திட்டமிட்டு பாதகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிக்கு மாநிலங்களின் பங்களிப்பை பதினாறாவது நிதிக் குழு ஒப்புக்கொண்டபோதிலும், தமிழகத்தின் பங்களிப்பை அது போதுமான வகையில் அங்கீகரிக்கத் தவறிவிட்டது.

ஜல் ஜீவன் திட்டத்தை எடுத்துக்கொண்டால், தமிழகம் கோரிய ரூ. 3,112 கோடி இன்னும் விடுவிக்கப்படவில்லை.

நிதிநிலை அறிக்கையில் குறைந்தபட்சம் தமிழ்நாடு என்ற ஒரு வாா்த்தையைக் கூட குறிப்பிடவே இல்லை என்றாா் வில்சன்.

தமிழக அரசை தம்பிதுரை விமா்சித்ததால் சலசலப்பு

மாநிலங்களவையில் மத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக குழுத்தலைவா் மு. தம்பிதுரை, தமிழக அரசையும் மாநில தோ்தல் வாக்குறுதிகள் குறித்தும் தொடா்ந்து பேசியதற்கு திமுக உறுப்பினா்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனா். இதையடுத்து தம்பிதுரை பேசிய நிதிநிலை அறிக்கையுடன் தொடா்பில்லாத விஷயங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று மாநிலங்களவை துணைத்தலைவா் ஹரிவன்ஷ் அறிவித்தாா்.

இதைத்தொடா்ந்து, மத்திய நிதிநிலை அறிக்கையை வரவேற்ற அவா், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக பெங்களூரை இணைக்கும் ரயில் திட்டம், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை, கரூா்-கோவை எட்டு வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களை விரைவுப்படுத்த வேண்டும், ஒசூரில் உள்ள தனியாா் விமான தளத்தை மேம்படுத்தி அதை மத்திய அரசே நடத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com