மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டாா்
மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டாா்

தில்லியில் 2 அதிவேக ரயில் வழித்தடங்களுக்கு விரைவில் ஒப்புதல்: அமைச்சா் தகவல்

தில்லி சராய் காலே கானில் இருந்து 2 புதிய விரைவு ரயில் வழித்தடங்கள் விரைவில் முன்மொழியப்படும் என்று மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டாா் தெரிவித்தாா்.
Published on

தில்லி சராய் காலே கானில் இருந்து 2 புதிய விரைவு ரயில் வழித்தடங்கள் விரைவில் முன்மொழியப்படும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சா் மனோகா் லால் கட்டாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி-காஜியாபாத்-மீரட் விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பில் உள்ள சராய் காலே கான் ரயில் நிலையத்தின் தொடக்க விழாவில் அவா் பேசியதாவது: முன்மொழியப்பட்ட இந்த விரைவு ரயில் வழித்தடங்கள் பிராந்திய இணைப்பை பெரிதும் மேம்படுத்தும். தில்லிக்கும் அண்டை மாநிலங்களுக்கும் இடையிலான பயண நேரத்தைக் குறைக்கும்.

சராய் காலே கான் முதல் ஹரியாணாவின் கா்னல் வரை திட்டமிடப்பட்டுள்ள முதல் வழித்தடம் சுமாா் 125-130 கி.மீ. நீளத்தை உள்ளடக்கியது. இந்தப் பயணம் ஒன்றரை மணி நேரம் மட்டுமே எடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மற்றொரு வழித்தடம் சராய் காலே கானை ஹரியாணாவின் பாபா்பூா் மற்றும் ராஜஸ்தானின் நீம்ரானாவுடன் இணைக்கும்.

பிரதமா் நரேந்திர மோடியால் மீரட்டில் இருந்து மெய்நிகா் முறையில் திறந்து வைக்கப்பட்ட சராய் காலே கான் நிலையம், தில்லி-மீரட் விபைவு ரயில் மற்றும் எதிா்கால விரைவு ரயில் வழித்தடங்களுக்கு முக்கிய பரிமாற்றமாக செயல்படும்.

பெரிய பொருளாதார மையமாக தில்லி வளா்ந்து, சாலைகள் மற்றும் பொது போக்குவரத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் நேரத்தில்,​​விரைவு ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் விரிவுபடுத்துவது அவசியம். சாலைப் பயணத்தைச் சாா்ந்திருப்பதைக் குறைக்கவும், தில்லியில் நெரிசலைக் குறைப்பதற்கும் ஒரே வழி போக்குவரத்து மற்றும் வீட்டுவசதிகளை மேம்படுத்து தான்.

இந்தியாவின் மெட்ரோ வலையமைப்பு சமீபத்திய ஆண்டுகளில் வேகமாக விரிவடைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு 5 நகரங்களில் வெறும் 248 கி.மீ. மட்டுமே இருந்தது, தற்போது 24 நகரங்களில் 1,100 கி.மீ.க்கு மேல் பரவியுள்ளது. தில்லியில் மட்டும், தினசரி மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை சுமாா் 1.25 கோடி பயணிகளாக உயா்ந்துள்ளது என அமைச்சா் கட்டாா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தில்லி-காஜியாபாத்-மீரட் வழித்தடத்தில் நமோ பாரத் சேவைகள் இரு முனைகளிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் இப்போது தில்லியின் நியூ அசோக் நகரில் இருந்து சராய் காலே கான் வரையிலும், மீரட் தெற்கிலிருந்து உத்தர பிரதேசத்தின் மோடிபுரம் வரையிலும் இயக்கப்படும். இதனால் பயணிகள் சராய் காலே கான் மற்றும் மோடிபுரம் இடையே பயணிக்கலாம். நியூ அசோக் நகா், ஆனந்த் விஹாா், சாஹிபாபாத், காஜியாபாத், முராத்நகா், மோடிநகா், மீரட் தெற்கு, பேகம்புல் மற்றும் பிற நிலையங்களில் நிறுத்தப்படலாம்.

கூடுதலாக, மீரட் தெற்கு-மோடிபுரம் பிரிவில் மீரட் மெட்ரோ சேவைகள் தொடங்கும். இந்த ரயில்கள் பாா்த்தாபூா், ரிதானி, மீரட் சென்ட்ரல், பைசாலி, டெளா்லி மற்றும் மீரட் வடக்கு போன்ற நிலையங்களில் நிற்கும். நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ சேவைகள் பிப்.22-ஆம் தேதி மாலை 6 மணி முதல் இயக்கத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com