அடர் பனிப்புகை மூட்டம்: கடுமையான பிரிவில் நீடிக்கும் காற்று மாசு!

காற்று மாசு தொடர்ந்து கடுமையான பிரிவில் இருந்து வருவதால் தில்லியில் செவ்வாய்க்கிழமை வானம் அடர்ந்த

காற்று மாசு தொடர்ந்து கடுமையான பிரிவில் இருந்து வருவதால் தில்லியில் செவ்வாய்க்கிழமை வானம் அடர்ந்த புனிப்புகை மூட்டத்துடன் காணப்பட்டது. லேசான தூறல் மழை பெய்ததால், காற்று மாசு மேலும் அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
விருப்பத்தகாத வானிலை சூழல், பயிர்க் கழிவுகள் எரிப்பால் ஏற்படும் புகை காரணமாக தில்லியில் திங்கள்கிழமை பல இடங்களில் காற்றின் தரக் குறியீடு கடுமையான பிரிவில் இருந்தது. இது செவ்வாய்க்கிழமையும் நீடித்தது. காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு 403-ஆக பதிவாகி இருந்தது. இது கடுமையான பிரிவின் கீழ் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் தெரிவித்தனர்.
தில்லியில் 17 இடங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவிலும், 14 இடங்களில் மோசமான பிரிவிலும் இருந்ததாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவித்தன.
காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் நல்ல பிரிவிலும், 51 முதல் 100 புள்ளிகள் வரை இருந்தால் திருப்திகரமான பிரிவிலும், 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான பிரிவிலும், 201 முதல் 300 வரை இருந்தால் மோசமான பிரிவிலும், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான பிரிவிலும் 401 முதல் 500 வரை இருந்தால் கடுமையான பிரிவிலும் இடம்பெறும்.
செவ்வாய்க்கிழமை தலைநகரில் பிஎம் 2.5 நுண்துகள் அளவு 238 - ஆகவும், பிஎம் 10 நுண்துகள் அளவு 399- ஆகவும் பதிவாகி இருந்தது. காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு, ஆராய்ச்சி அமைப்பு (சஃபர்) வெளியிட்ட புள்ளிவிவரத் தகவலில், வானம் மேக மூட்டத்துடனும், சில சமயங்களில் ஆங்காங்கே மழைக்கும் வாய்ப்பு இருக்கக் கூடும். எனினும், மழையானது நீண்ட நேரமும், பரவலாகவும் பெய்யாத பட்சத்தில் மாசுவை அதிகரிக்கவும் இது காரணமாக வாய்ப்புள்ளது. இந்த லேசான மழையானது காற்றில் ஈரப்பதத்தை ஏற்படுத்துவதால் கூடுதல் நுண்துகள்களை சுற்றுச்சூழல் மண்டத்தில் தங்கியிருக்க உதவும். இதன் காரணமாக மாசு அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள சுற்றுச்சூழல் மாசு தடுப்பு ஆணையகம் (இபிசிஏ) திங்கள்கிழமை தெரிவித்திருந்த தகவலில், தில்லியில் காற்று மாசு தொடர்ந்தால் சிஎன்ஜி எரிவாயு மூலம் இயங்காத வாகனங்களுக்கும், வர்த்தக வாகனங்களுக்கும் முழுத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்போதுதான் மாசுவைக் கட்டுப்படுத்த முடியும்' என எச்சரித்திருந்தது. தில்லியில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் கடுமையான பிரிவிலேயே தொடர்கிறது. 
பனிப்புகை மூட்டம் காரணமாக சாலைகளில் காண்புதிறன் குறைவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. அதேபோன்று, கண் எரிச்சல், இருமல் போன்ற பிரச்னைகளையும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் நிலை உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com