சாக்கடைகளை சுத்தப்படுத்த இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்: மாநகராட்சிகளுக்கு மனோஜ் திவாரி வலியுறுத்தல்

சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் (செஃப்டிக் டாங்க்) ஆகியவற்றை சுத்தப்படுத்த மனிதர்களைப் பயன்படுத்தாமல்

சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் (செஃப்டிக் டாங்க்) ஆகியவற்றை சுத்தப்படுத்த மனிதர்களைப் பயன்படுத்தாமல் இயந்திரங்களைப் பயன்படுத்த தில்லி மாநகராட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி வலியுறுத்தியுள்ளார். உலக கழிவறை தினத்தை முன்னிட்டு, சுலாஃப் இண்டர்நேஷனல் அமைப்பு சார்பில் தில்லி கன்ஸ்டிடியூஷனல் கிளப்பில் துப்புரவுப் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்பு முறைகளும் என்ற தலைப்பில் கண்காட்சியும் கருத்தரங்கமும் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இதில், துப்புரவுப் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தில்லியின் பல்வேறு பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். மேலும், இந்தக் கண்காட்சியில், சுலாஃப் இண்டர்நேஷனல் அமைப்பு சார்பில் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் இயந்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. 
இதைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, மாநகராட்சி மேயர்கள் நரேந்தர் சாவ்லா (தெற்கு தில்லி), ஆதேஷ் குமார் குப்தா (வடக்கு தில்லி), பிபின் பிகாரி சிங் (கிழக்கு தில்லி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இந்த நிகழ்வில் மனோஜ் திவாரி பேசியதாவது: மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலத்தை நீக்க வேண்டும். சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்கும் வகையில், சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் இயந்திரங்களை தில்லி மாநகராட்சிகள் கொள்முதல் செய்ய வேண்டும். இந்த இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கான ஆணையை மாநகராட்சி மேயர்கள் உடனடியாக வழங்க வேண்டும் என்றார் அவர். 
சுலாஃப் இண்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் பிந்தேஸ்வர் பதக் பேசுகையில், "எங்கள் அமைப்பிடம் உள்ள இயந்திரங்களை தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் மாநகராட்சிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்றார்.  இதைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயர்கள் பேசுகையில், "சாக்கடைகள் சுத்தப்படுத்தும் இயந்திரங்களைப் பயன்படுத்துவோம்' என்று உறுதி அளித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com