மயூர் விஹார் பேஸ்-2  கணபதி கோயிலில்  விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு

மயூர் விஹார் பேஸ் 2-இல் அமைந்துள்ள ஸ்ரீ காருண்ய மகா கணபதி கோயிலில் 30-ஆவது விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.

மயூர் விஹார் பேஸ் 2-இல் அமைந்துள்ள ஸ்ரீ காருண்ய மகா கணபதி கோயிலில் 30-ஆவது விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.
இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் போது வினை தீர்க்கும் விநாயகர் எனும் தலைப்பில் மீனா வெங்கி சொற்பொழிவாற்றினார். அதில் விநாயகர் வழிபாட்டில் அருகம்புல்லின் முக்கியத்துவம் குறித்து அவர் எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசுகையில், "மாபெரும் ஜனக மன்னர் விநாயகரின் பசியைத் தீர்க்க முடியாத நிலையில், ஒரு ஏழையானவர் விநாயகருக்கு அருகம்புல்லை அளித்து அவரது பசியைத் தீர்க்க முடிந்தது. குபேரனும்கூட தனது செல்வம் குறித்து பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார். 
ஆனால், பிரபஞ்சத்தில் இருந்த அவரது ஒட்டுமொத்த செல்வத்தையும் ஒரு அருகம்புல்லின் எடைக்கு சமன் செய்ய முடியவில்லை. இதனால், அவர் கடவுளிடம் தனது அகந்தையை விட்டொழித்து சரணடைய வேண்டியிருந்தது. பக்தர்கள் தங்களது "நான்', "எனது' என்கிற அகந்தையை துறந்து சரணடைந்தால் விநாயகப் பெருமான் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்' என்றார். 
முன்னதாக, இக்கோயில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னை அடையாறு கலா க்ஷேத்திரத்தின் கவிதா ரிஷிகேஷ் "ஸ்ரீ கணேஷ் துப்யம்' எனும் தலைப்பில் கலை நிகழ்ச்சியை நடத்தினார். டாக்டர் பி.பி. கண்ண குமாரின் மாணவர் அவினாஷ் ஸ்ரீதரனின் கர்நாடக வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பக்கவாத்தியக் கலைஞர்கள் ராகவேந்திர பிரசாத் வயலினும், விக்னேஷ் ஜெயராமன் மிருதங்கமும் வாசித்தனர். ஸ்ரீஐயப்பா பூஜை சமதியின் ஜூனியர் குழுவினரின் பஜனை நிகழ்ச்சி மீனாட்சி சங்கரின் வழிகாட்டுதலுடன் நடைபெற்றது. 
சஹஸ்ரநாம ஹோமமும், விநாயகர் உற்சவ மூர்த்தி புறப்பாடும் நடைபெற்றது. ஒன்பது நாள்களிலும் காலையிலும், மாலையிலும் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. விழா நாள்களில் தினந்தோறும் விநாயக பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 
நிறைவு நாளான திங்கள்கிழமை ஹனுமனுக்கு சிறப்பு உற்சவம் நடைபெற்றது. விழாவையொட்டி கோயிலின் ராஜகோபுரம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் என்று ஸ்ரீ கணேஷ சேவா சமாஜத்தின்துணைத் தலைவர் ராகவன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com