சிதிலமடைந்த பள்ளியிலிருந்து மாணவர்களை இடம் மாற்றுவது எப்போது?  தில்லி அரசுக்கு கேள்வி

தில்லியில் 99 ஆண்டுகள் பழைமையான சிதிலமடைந்த அரசுப் பள்ளிக் கட்டடத்தில் இருந்து மாணவர்களை வேறு பள்ளிக்கு

தில்லியில் 99 ஆண்டுகள் பழைமையான சிதிலமடைந்த அரசுப் பள்ளிக் கட்டடத்தில் இருந்து மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றப் போவது எப்போது? என்று ஆம் ஆத்மி அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன்,  நீதிபதி வி.கே. ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, "சிதிலமடைந்த பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாணவர்கள் எப்போது மாற்றப்படுவார்கள்? அந்தப் பள்ளியைப் புனரமைக்கும் பணி எப்போது தொடங்கப்பட்டு முடிக்கப்படும் என்பது குறித்து விவரங்கள் அடங்கிய நிலவர அறிக்கையை தில்லி அரசு தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சோஷியல் ஜூரிஸ்ட் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தது. அதில், தில்லி கண்டோன்மென்டில் செயல்படும் ராஜ்புதன ரைஃபிள்ஸ் ஹீரோஸ்  நினைவு மேல்நிலை பள்ளி தில்லி அரசால் 1975-இல் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தப் பள்ளிக்கு 100 சதவீத நிதியை தில்லி அரசு வழங்கி வருகிறது. தற்போது இந்த பள்ளி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இப்பள்ளி அனைவருக்குமானது என்ற போதிலும், தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடியாத நிலையில் உள்ள ராணுவ அதிகாரிகளின் பணியாளர்களின் குழந்தைகளுக்கு இந்தப் பள்ளி கல்வி அளித்து வருகிறது.
இந்நிலையில்,  பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குடிக்கத்தக்க குடிநீர்,  செயல்பாட்டில் உள்ள கழிப்பறைகள், அறிவியல்,  கணினி ஆய்வகங்கள்,  தூய்மையான வகுப்பறைகள்,  உரிய சுற்றுச் சுவர்,  போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது.  இதனால், தற்போது செயல்பட்டு வரும் சிதிலமடைந்த பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டு நவீன வசதியுடைய கட்டடம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட  வேண்டும்'  என்று கோரப்பட்டிருந்தது.
தில்லி உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற முந்தைய விசாரணையின் போது, தில்லி அரசின் கல்வி இயக்குனரகம் சார்பில்,  "சம்பந்தப்பட்ட பள்ளிக் கட்டடம் தொடர்பாக கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில்,  இந்தப் பள்ளிக் கட்டடம் 1919-இல் கட்டப்பட்டது தெரிய வந்தது. இந்தப் பள்ளி அதன் வாழ்நாள் காலத்தைத் தாண்டி செயல்பட்டு வருகிறது' என தெரிவிக்கப்பட்டது.
அப்போது, தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அசோக் அகர்வால்,  "இப்பள்ளியில் 450 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை உள்ளது.  மேலும், போதிய அளவில் ஆசிரியர்களும் இல்லை' என்று தெரிவித்திருந்தார். 
இந்நிலையில்,  மேற்கண்ட உத்தரவை தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com