அடையாறு, கூவம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம்: தமிழக பொதுப் பணித் துறைக்கு ரூ. 2 கோடி அபராதம்

சென்னையில் அடையாறு, கூவம் நதிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் செய்ததாக

சென்னையில் அடையாறு, கூவம் நதிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் செய்ததாக, தமிழக அரசின் பொதுப் பணித் துறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ. 2 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த அபராதத் தொகையை 15 நாள்களுக்குள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்துமாறும் உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற காணொளி விசாரணையின்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி எஸ்.பி. வாங்டி அக்டோபர் 31-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: 
தமிழக அரசின் பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளர் அளித்துள்ள அறிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது பிரச்னைகளுக்கு தீர்வுகாண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தெளிவாக இல்லை. 
பக்கிங்காம் கால்வாய் பணிக்காக ஜவாஹர்லால் நேரு தேசிய ஊரக மறுநிர்மாணத் திட்டத்தின்  கீழ் ரூ. 603.67 கோடி அளவுக்கான நிதி, நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
இது தவிர, பருவமழைக்கு முன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்காக 2017-ஆம் ஆண்டு ரூ. 70 லட்சமும், 2018-ஆம் ஆண்டு ரூ. 80.50 லட்சம் செலவிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இருப்பினும், மிதக்கும் பொருள்களை மட்டும் அகற்றும் பணிகள் மட்டும் மேற்கொண்டிருப்பதும் பார்க்க முடிகிறது. 
மேலும், 26,300 ஆக்கிரமிப்புகளில் 408 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டிருப்பதும், மீதமுள்ள 25,892 ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதும் ஏமாற்றத்தை அளிக்கிறது. 
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் நிலுவையில் உள்ள வழக்குகள் எனக் கூறும் பதில் முற்றிலும் தெளிவற்றதாக உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகிய ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த விவரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. 
சுற்றுச்சூழல், மக்களின் நலன்கருதி அவசரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை உறுதிசெய்ய இந்த விவகாரத்தை தமிழக அரசின் தலைமைச் செயலர் ஆராய வேண்டும். 
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் செய்த காரணத்துக்காக தமிழக அரசின் பொதுப் பணித் துறைக்கு ரூ. 2 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. 
இந்த அபராதத் தொகையை 15 நாள்களுக்குள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் டெபாசிட் செய்ய வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக 2018, செப்டம்பர் 24-ஆம் தேதி உத்தரவுக்கு மீண்டும் இணங்காவிட்டாலும், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும் வரையிலும் நாள்தோறும் ரூ. 50 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com