ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு விழாவுக்கு தில்லி அரசுக்கு அழைப்பில்லை: அமைச்சர்

ஐடிஓ நடை மேம்பாலம் (ஸ்கைவாக்) திறப்பு விழாவுக்கு தில்லி அரசுக்கு அழைப்பு ஏதும் வரவில்லை என்று

ஐடிஓ நடை மேம்பாலம் (ஸ்கைவாக்) திறப்பு விழாவுக்கு தில்லி அரசுக்கு அழைப்பு ஏதும் வரவில்லை என்று பொதுப்பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு விழா அக்டோபர் 15-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. 
இது தொடர்பான அழைப்பிதழில், தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் தலைமையில், புது தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் மீனாட்சி லேகி முன்னிலையில், மத்திய  வீட்டுவசதி,  நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி  நடை மேம்பாலத்தை திறந்து வைக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழில் ஆம் ஆத்மி அமைச்சர்களின் பெயர்களோ, எம்எல்ஏக்களின் பெயர்களோ இடம் பெறவில்லை. இத்திட்டத்தை தில்லி 
பொதுப்பணித் துறை கட்டி முடித்திருந்த நிலையில் இந்த விவகாரம் புதிய மோதல் போக்கை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து தில்லி பொதுப்பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஐடிஓ நடை மேம்பாலத் திட்டம் தொடர்பான மாதிரியை  தில்லி நகர்ப்புற கலை ஆணையத்துக்கு  தில்லி பொதுப்பணித் துறை கடந்த 2016, ஆகஸ்டில் அளித்தது. இதை ஆணையம்  ஏற்றுக் கொண்டது. மேலும், இத்திட்டத்துக்கு ஜவாஹர்லால் நேரு  நகர்ப்புற  புனரமைப்பு திட்ட செயலாக்கம் என பெயரிடப்பட்டது. ஆனால், தற்போது புத்துயிர் மற்றும் நகர்ப்புற உருமாற்றத்துக்கான அடல் செயல்திட்டம் (அம்ருத்) என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 80 சதவீதம் நிதியை மத்திய அரசு  வழங்கியுள்ளது. இதன்படி திட்டத்தின் மொத்த மதிப்பீடான ரூ. 54 கோடியில் ரூ. 12 கோடியை தில்லி அரசு வழங்கியுள்ளது. திட்டம் நிறைவேற்றப்பட்டு, தற்போது இப்பகுதி சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக மாற உள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா குறித்து தெரிவிக்கப்படாதது போல,  திறப்பு விழா குறித்தும் தில்லி அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை. 
ஆம் ஆத்மி அரசுக்கு இதுபோன்ற விழாக்கள் முக்கியமல்ல. பொதுமக்களின் நலன் கருதி தில்லி அரசு மேற்கொள்ளும் திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், அத்திட்டங்களை மத்திய அரசோ, மக்கள் பிரதிநிதிகளோ தொடங்கி வைத்தால் மகிழ்ச்சியே என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com