தேர்தல் உலா 2019: இவர்கள் இல்லாமல் தேர்தல்! 

தலைமை என்பது மகுடம் தாங்குவது மட்டுமல்ல. காயத் தழும்புகளை ஏற்பதும், கடுமையான பொறுப்புகளை சுமப்பதும் தலைமைதான்.

தலைமை என்பது மகுடம் தாங்குவது மட்டுமல்ல. காயத் தழும்புகளை ஏற்பதும், கடுமையான பொறுப்புகளை சுமப்பதும் தலைமைதான். இத்தகைய பண்புகளைக் கொண்டோரைதான், நமது மக்களும்  தலைவர்களாக ஏற்பார்கள். தங்களது கட்சிக்காக இரவு- பகல் பாராமல் பல ஆண்டுகள் பணியாற்றியோரும், பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த தலைவர்கள் பலரும், 2019-ஆம் ஆண்டு தேர்தலில் பல்வேறு காரணங்களுக்காகப் போட்டியிடவோ பிரசாரம் செய்யவோ இல்லை... சிலர் முழு நேர அரசியலில் இருந்து விடை பெற்றுவிட்டனர். சிலர் நம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டனர்...

வாஜ்பாய்

நாட்டின் பிரதமராக 3 முறையும், வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் அலங்கரித்தவர் வாஜ்பாய். மக்களவை எம்பியாக 10 முறையும், மாநிலங்களவை எம்பி.யாக இருமுறையும் இருந்துள்ளார். பாரதிய ஜன சங்கமாகத் தொடங்கி, அவசரநிலைப் பிரகடன காலத்துக்குப் பிறகு ஜனதா கட்சியில் இணைந்தது. ஜனதா ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியாகப் புது வடிவம் பெற்றது. அதன் நிறுவனர்களில் ஒருவரான இவர், கடந்த 2005ஆம் ஆண்டில் தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து, பாஜகவின் வழிகாட்டியாக தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாஜ்பாய், 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி காலமானார். 2009, 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் வாஜ்பாய், பாஜகவுக்காக பிரசாரம் செய்யாத போதிலும், அவரை போன்ற ஆட்சியைத் தருவோம் என்று தெரிவித்தே மக்களிடம் அக்கட்சித் தலைவர்கள் ஆதரவு திரட்டினர். தற்போது வாஜ்பாய் காலமாகி விட்டதைத் தொடர்ந்து,  அவர் இல்லாமல் பாஜக சந்திக்கும் முதல் தேர்தலாக 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் அமைகிறது.

எல்.கே. அத்வானி

இன்றைய பாஜகவின் முதுபெரும் தலைவரான அத்வானி, 1989 முதல் 7முறை மக்களவை எம்.பி.யாகவும், 1970 முதல் 1989 வரை மாநிலங்களவை எம்.பி.யாக 4 முறையும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரின் வயது 91. வயது மூப்பினால் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. அயோத்தி ராமர் கோயில் எழுப்ப ஆதரவு திரட்டி நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தினார்.மூலம் பாஜகவின் அரசியல் செல்வாக்கு அதிகரிக்க காரணமாக திகழ்ந்த இவர், மத்தியில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் துணை பிரதமராகவும், மத்திய உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அத்வானியை பிரதமர் பதவி வேட்பாளராக முன்னிறுத்தியே பாஜக போட்டியிட்டது. அத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வென்றது. 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அந்தத் தொகுதியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தற்போது போட்டியிடுகிறார்.

முரளி மனோகர் ஜோஷி

பாஜகவில் வாஜ்பாய், அத்வானிக்கு நிகரான தலைவர்களில் முரளி மனோகர் ஜோஷியும் ஒருவர். கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடிக்காக வாராணசி தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு, கான்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்நிலையில், ஜோஷிக்கு தற்போது 85 வயதாவதை சுட்டிக்காட்டி, கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஏதுவாக, 2019-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பளிக்கப்படவில்லை. பாஜக தலைவர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை ஜோஷி வகித்துள்ளார். கடந்த அரை நூற்றாண்டு காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கி வரும் ஜோஷிக்கு, முதல்முறையாக 2019-ஆம் ஆண்டில் தேர்தல் களத்தில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

அருண் ஜேட்லி

மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி, கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பஞ்சாபின் அமிருதசரஸ் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவரான அமரீந்தர் சிங்கிடம் (தற்போதைய பஞ்சாப் முதல்வர்) அவர் தோல்வியடைந்தார். இதையடுத்து, மாநிலங்களவை எம்.பி.யாக அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஜேட்லி அறிவித்து விட்டார்.

சுஷ்மா ஸ்வராஜ்

பாஜகவின் 2ஆம் நிலை தலைவர்களில் ஒருவராகவும், பிரதமர் பதவி வேட்பாளர்களில் ஒருவராக முன்பு பேசப்பட்டவர் சுஷ்மா ஸ்வராஜ். 2014 தேர்தலில் விதிஷா தொகுதியில் வெற்றி பெற்றார். மோடி அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சரானார். இந்நிலையில், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என சுஷ்மா ஸ்வராஜ் தாமாக முன்வந்து அறிவித்து விட்டார். 7 முறை எம்.பி.யாக பதவி வகித்துள்ள சுஷ்மா, இத்தேர்தலில் போட்டியிடாததற்கான காரணத்தை அறிவிக்கவில்லை. 

வெங்கய்ய நாயுடு

பாஜகவின் 2ஆம் நிலை தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் வெங்கய்ய நாயுடு. குடியரசு துணைத் தலைவராக பதவி வகிக்கும் வெங்கய்ய நாயுடு, அந்தப் பதவியை ஏற்பதற்கு முன்பு தாம் வகித்து வந்த மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். தாம் அங்கம் வகித்த பாஜகவில் இருந்தும் அவர் விலகினார். இத்தேர்தலில் அவருடைய பங்களிப்பும் இல்லை.

உமா பாரதி

பாஜகவின் ஹிந்துத்துவா அடையாளமாக திகழ்ந்தவர் உமா பாரதி. பாஜகவின் ராமஜென்ம பூமி இயக்கத்தில் தீவிரமாக பங்கெடுத்தவர். மத்தியப் பிரதேச முதல்வராகவும், வாஜ்பாய் அமைச்சரவையிலும், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையிலும் முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார். அவரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஏற்கெனவே அறிவித்துவிட்டார். பாஜகவின் துணைத் தலைவராக அவருக்கு கட்சிப் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு எம்.பி.யானவர் யோகி ஆதித்யநாத். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியமைத்ததும், முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து 2014ஆம் ஆண்டு தேர்தலில் தாம் போட்டியிட்டு வென்ற கோரக்பூர் தொகுதி எம்.பி. பதவியை அவர் ராஜிநாமா செய்தார். எனவே இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், பாஜக மூத்த தலைவர்கள் பி.சி. கந்தூரி, சாந்தகுமார், ஷாநவாஸ் ஹூசேன் ஆகியோரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மகாராஷ்டிர பாஜகவில் செல்வாக்கு பெற்று திகழ்ந்த கோபிநாத் முண்டே, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையிலும் இடம்பெற்றார். ஆனால் தில்லியில் கடந்த 2014ஆம் ஆண்டு நேரிட்ட கார் விபத்தில் அவர் துரதிருஷ்டவசமாக பலியானார்.

யஷ்வந்த் சின்ஹா

வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தவர் யஷ்வந்த் சின்ஹா. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் அவருக்கு பாஜகவில் வாய்ப்பளிக்கப்படவில்லை. அவரது மகன் ஜெயந்த் சின்ஹாவுக்கு பாஜக வாய்ப்பளித்தது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பாஜகவை விமர்சித்து வந்த யஷ்வந்த் சின்ஹா, 2018இல் அக்கட்சியிலிருந்து விலகினார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அவர் சுயேச்சையாகவோ, பிற கட்சிகளின் சார்பிலோ போட்டியிடுவாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை.

ஜஸ்வந்த் சிங்

வாஜ்பாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் ஜஸ்வந்த் சிங். 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். எனினும், இத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆதரவு அளித்த ஹமீது அன்சாரி வெற்றி பெற்றார். ராஜபுத்திர சமூக தலைவர்களில் ஒருவரான இவருக்கு 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இதனால் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இத்தேர்தலில் அவருக்கு தோல்வியே மிஞ்சியது. 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது வீட்டில் கீழே விழுந்து தலையில் காயமடைந்த ஜஸ்வந்த் சிங், அன்று முதல் கோமாவில் உள்ளார். இதனால் அவராலும் தேர்தலில் போட்டியிட இயலவில்லை. அவரது மகன் காங்கிரஸில் சேர்ந்து விட்டார்.

ப. சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடவில்லை. மாநிலங்களவை எம்.பி.யாகத் தற்போது உள்ளார். ப.சிதம்பரம் முன்பு போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தற்போது போட்டியிடுகிறார்.

ஏ.கே. அந்தோணி

முன்னாள்  பாதுகாப்புத் துறை அமைச்சரும், கேரள முதல்வராக 3 முறை பதவி வகித்தவருமான ஏ.கே. அந்தோணி, கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என்று முன்கூட்டியே அறிவித்து விட்டார்.

மாயாவதி

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி,  மக்களவைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்து விட்டார். இத்தேர்தலில் சமாஜவாதியுடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் போட்டியிடுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் போட்டியிட்டது. ஆனால் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

சரத் பவார்

காங்கிரஸýடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தவர் சரத் பவார். மகாராஷ்டிர முதல்வர், பாதுகாப்பு அமைச்சர், மத்திய வேளாண் அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். தேசிய அரசியலில் பெரும் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படும் சரத்பவார்,  பிசிசிஐ தலைவராகவும் இருந்தார். தற்போது தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருக்கும் அவர், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்து விட்டார்.

லாலு பிரசாத்

பிகார் முன்னாள் முதல்வரும், முன்னாள் ரயில்வேத் துறை அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார். இதனால் அவரால் தேர்தலில் போட்டியிடவோ, தனது கட்சிக்கு பிரசாரம் செய்யவோ முடியாத நிலை நிலவுகிறது. இதனால் அவரது கட்சி, லாலு பிரசாத் இல்லாமலேயே, காங்கிரஸýடன் கூட்டணி சேர்ந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது. ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளாதால், 2019 மக்களவைத் தேர்தலில் லாலு பிரசாதுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை எனக் கூறப்படுகிறது.

பி.ஏ. சங்மா

மக்களவை முன்னாள் தலைவர், மேகாலய முன்னாள் முதல்வர் என்று பல்வேறு அடையாளங்களுக்கு சொந்தக்காரர் பி.ஏ. சங்மா. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத்பவாருடன் இணைந்து தொடங்கியவர்களில் பி.ஏ. சங்மாவும் ஒருவர். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி, தேசிய மக்கள் கட்சியை அவர் ஆரம்பித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் துரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் காலமானார். இதனால் இத்தேர்தலில் அவரது வழிகாட்டுதல் இல்லாமல், தேசிய மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

முப்தி முகமது சயீது

ஜம்மு-காஷ்மீர் அரசியலில் நீங்கா இடம் பிடித்தவர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மறைந்த நிறுவன தலைவர் முஃப்தி முகமது சயீது. ஜம்மு-காஷ்மீர் முதல்வராகவும், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து அரசை அமைத்திருந்த முஃப்தி முகமது சயீது, கடந்த 2015ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் காலமானார். இதனால் அவரது மகள் மெஹபூபா முஃப்தி, கட்சித் தலைவராகவும், மாநில முதல்வராகவும் பதவியேற்றார். எனவே 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மெஹபூபா முஃப்தி தலைமையில் மக்கள் ஜனநாயகக் கட்சி போட்டியிடுகிறது.

ஜெ.ஜெயலலிதா

தமிழகத்தில் மறைந்த முதல்வர் எம்ஜிஆருக்கு பிறகு, அதிமுகவில் மிகப்பெரும் தலைவராக விளங்கியவர் ஜெயலலிதா. கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு அதிமுக அதிக இடங்களில் வென்றதற்கு, ஜெயலலிதாவின் தேர்தல் யுக்தியும், தீவிர பிரசாரமுமே முக்கிய காரணமாகும். உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்து விட்ட நிலையில், இத்தேர்தலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எதிர்கொள்கிறது.

மு.கருணாநிதி

திமுகவை 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிக் காத்தவர் கருணாநிதி. உடல்
நலக்குறைவால் கடந்த ஆண்டு அவர் உயிரிழந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் அவரது மகன் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக போட்டியிடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com