பல்பொருள் அங்காடியில் கொள்ளை: ஒருவர் கைது

தெற்கு தில்லியில் 24 மணி நேரம் செயல்படும் பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த ஒருவரை தில்லி காவல் துறையினர் கைது செய்தனர். 

தெற்கு தில்லியில் 24 மணி நேரம் செயல்படும் பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த ஒருவரை தில்லி காவல் துறையினர் கைது செய்தனர். 
இது குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தெற்கு தில்லி, வசந்த் குஞ்ச் பகுதியில் 24 மணி நேரம் செயல்படும் பல்பொருள் அங்காடி உள்ளது. இந்த பல்பொருள் அங்காடியில் புதன்கிழமை இரவு மர்ம முகமூடிக் கும்பல் புகுந்தது. கடை ஊழியர்களைத் துப்பாக்கி, கத்தியால் மிரட்டி ரூ.13 ஆயிரம் ரொக்கம், பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றது. 
இது தொடர்பாக கடையின் உரிமையாளர்கள் வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்யப்பட்டது. அதில், மர்ம நபர்கள் துப்பாக்கியால் ஊழியர்களை மிரட்டி பணத்தை எடுத்துச் செல்வதும், கத்தியால் கடை ஊழியரை மிரட்டியதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். 
இந்நிலையில், கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் தெற்கு தில்லியில் உள்ள ஆயா நகருக்கு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் அப்பகுதியில் விரட்டிச் சென்று தௌத் கான் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், தெற்கு தில்லி உள்ளிட்ட ஏழு பல்பொருள் அங்காடிகளில் முக்கிய குற்றவாளி ரோகித் என்கிற சோட்டு என்பவருடன் சேர்ந்து கொள்ளையில்
ஈடுபட்டதாக தௌத் கான் தெரிவித்ததாகவும், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com