கலவர வழக்கு: ஆம் ஆத்மி எம்எல்ஏ உள்பட 3 பேர் குற்றவாளிகள் என தில்லி நீதிமன்றம் தீர்ப்பு

தில்லி வாயுசேனாபாதில் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற கலவர வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜார்வால் உள்பட 3 பேரை குற்றவாளிகளாக தில்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தில்லி வாயுசேனாபாதில் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற கலவர வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜார்வால் உள்பட 3 பேரை குற்றவாளிகளாக தில்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2013ஆம் ஆண்டு வாயுசேனாபாதில் ஒருவர் உயிரிழந்ததைக் கண்டித்து அப்பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது. அப்போது சாலை மறியலை போலீஸார் கலைக்க முற்பட்டபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தச்  சம்பவத்தில் இரண்டு அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன.  மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தில்லி போலீஸின் இரண்டு  காவலர்களையும், உதவி ஆய்வாளரையும் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு தில்லி கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தின் நீதிபதி சமர்  விஷால் முன் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி சமர் விஷால் வியாழக்கிழமை அளித்த தீர்ப்பில், "இந்தச் சம்பவத்தில் சட்ட விரோதமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடியிருக்கிறார்கள். அதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர். இதுதான் அவர்களின் பொதுவான நோக்கமாக இருந்துள்ளது. இதில், பிரகாஷ் ஜார்வால், சலீம், பிரகாஷ் ஆகியோர் காவல் துறையினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆகையால், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்குதல் நடத்தியது, கலவரத்தில் ஈடுபடுவது, சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவது ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கிறேன்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவு குற்றச்சாட்டுகளுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அதிகபடியாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கக் கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com