மாணவர்களுக்கு எதிரானது தில்லி அரசு: ஹர்ஷ்வர்தன்

பொதுப் பிரிவினருக்கு மத்திய அரசு வழங்கிய 10 சதவீத இட ஒதுக்கீட்டை தில்லியில் அமல்படுத்தாமல்

பொதுப் பிரிவினருக்கு மத்திய அரசு வழங்கிய 10 சதவீத இட ஒதுக்கீட்டை தில்லியில் அமல்படுத்தாமல் ஆம் ஆத்மி அரசு மாணவர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பாஜக சாந்தினி சௌக் வேட்பாளருமான ஹர்ஷ்வர்தன் குற்றம்சாட்டினார். 
சாந்தினி சௌக் தொகுதிக்குள்பட்ட ஆதர்ஷ் நகர், ஷாலிமர் பாக், பல்லிமாரன், மட்டியா மஹால் உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை நடந்துசென்று அவர் வாக்கு சேகரித்தார். 
அப்போது அவர் அளித்த பேட்டி: 
பொதுப் பிரிவில் உள்ள ஏழைகளின் நலனுக்காக மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தது. ஆனால், அதை தில்லியில் கேஜரிவால் அரசு அமல்படுத்தவில்லை. இதனால், பல்லாயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கல்லூரிகள், அரசுத் துறைகளில் வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. மேலும், மத்திய அரசின் மீதுள்ள போட்டியுணர்வால் "ஆயுஷ்மான் பாரத்' உள்ளிட்ட திட்டங்களையும் தில்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தவில்லை என்றார் அவர். 
புது தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் மீனாட்சி லேகி அத்தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். காலை 7 மணி தொடங்கி மதியம் 12 மணிவரை கரோல் பாகில் அவர் நடந்துசென்று பிரசாரம் செய்தார்.
நண்பகலில் கரோல் பாகில் உள்ள ஜெயின் சமாஜில் வாக்காளர்களுடன் உரையாடியனார். 
அப்போது அவர் பேசியது: 2015-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மிக் கட்சி சார்பில் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. 2 லட்சம் கழிப்பிடங்கள் அமைக்கப்படும், தில்லி முழுவதும் இலவச வைஃபை வசதி அமைக்கப்படும், புதிய கல்லூரிகள் உருவாக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் ஆம் ஆத்மிக் கட்சியால் வழங்கப்பட்டன. 
ஆனால்,  இந்த வாக்குறுதிகளில் எதையும் அக்கட்சி நிறைவேற்றவில்லை. ஆனால், மத்திய அரசு பல மக்கள் நலத் திட்டங்களை கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் செய்துள்ளது என்றார் அவர். 
பாஜகவின் மேற்கு தில்லி தொகுதி வேட்பாளர் பர்வேஷ் வர்மா, ரோஷன்புரா, நஜாப்கர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்ளிட்ட இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com