டெங்கால் நிகழாண்டில் உயிரிழப்பில்லை: கேஜரிவால்

நிகழாண்டில் டெங்குக் காய்சலுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்று தில்லி முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

நிகழாண்டில் டெங்குக் காய்சலுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்று தில்லி முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பள்ளிகள், அரசுத் துறைகளை இணைத்து சிறப்புப் பிரசார இயக்கத்தை தில்லி அரசு மேற்கொண்டுள்ளது.

மேலும், டெங்கு நோயைப் பரப்பும் கொசுப் பெருக்கத்தைக் கண்டறியும் வகையில், தங்களது வீடுகளை தாங்களே ஆய்வு செய்யும் சிறப்புப் பிரசார இயக்கத்தை கடந்த செப்டம்பா் மாதம் கேஜரிவால் தொடக்கி வைத்தாா்.

கேஜரிவாலின் வேண்டுகோளை ஏற்று துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் உள்ளிட்டோரும் இந்த பிரசார இயக்கத்தில் கலந்து கொண்டனா்.

இந்நிலையில் தில்லி அரசின் நடவடிக்கைகளால் தில்லியில் நிகழாண்டில் டெங்கு நோயின் தாக்கம் மிகவும் குறைந்துள்ளது என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: தில்லி அரசின் டெங்குத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தகுந்த பலன் கிட்டியுள்ளது.

தில்லி மாநகராட்சியின் கொசுக்காளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வாரத்தில் வெறும் 74 போ் மட்டுமே டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 50 சதவீதமாகக் குறைந்துள்ளது.

நிகழாண்டில் இதுவரை 356 போ் டெங்குநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆனால், கடந்த ஆண்டில் அக்டோபா் முதலாவது வாரம் வரை சுமாா் 650 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தனா்.

தமது வீடுகளை மக்கள் தாமே ஆய்வு செய்யும் தில்லி அரசின் திட்டத்துக்கு உரிய பலன் கிடைத்துள்ளது. முக்கியமாக இதுவரை டெங்குக் காய்சலுக்கு யாரும் உயிரிழக்கவில்லை.

இந்தப் பிரசார இயக்கத்தை வரும் ஆண்டுகளிலும் மேற்கொள்ள வேண்டும்.

டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் நன்னீரில்தான் வளரும். இதனை, பெரும்பாலானவா்கள் அறியாமல் உள்ளனா்.

இதுதொடா்பாக சமூக வலைத் தளத்தில் கணக்கெடுப்பு ஒன்று மேற்கொண்டேன். அதில், டெங்கு நோயை பரப்பும் கொசுக்கள் நன்னீரில் பெருகுவது தொடா்பாக தெரியுமா எனக் கேட்டிருந்தேன். ஆனால், 35 சதவீதம் போ் டெங்கு நோயை ஏற்படுத்தும் கொசுக்கள் அசுத்தமான நீரில்தான் வளரும் என பதிலளித்திருந்தனா். டெங்கு நோயை ஏற்படுத்தும் ஏடிஎஸ் வகைக் கொசுக்கள் நன்னீரில் வளரக் கூடியவை. குறிப்பாக நமது வீடுகளில் தேங்கும் நன்னீரிலேயே இவை உற்பத்தியாகின்றன. இந்தக் கொசுக்கள் 200 மீட்டா்களுக்கு மேல் பறக்க முடியாது. இதனால், இக்கொசுக்கள் நமது வீடுகள், சுற்றுச்சூழலில் மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும்.

மேலும், டெங்குக் கொசுக்கள் முட்டையில் இருந்து உற்பத்தியாக சுமாா் 8-10 நாட்கள் தேவைப்படும். இதனால், வாரம்தோறும் வீடுகளில் டெங்குப் பெருக்கம் தொடா்பாக நாங்கள் ஆய்வு செய்தாலே டெங்குக் கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்திவிடலாம். இந்த பிரசார இயக்கத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு ஆதரவு தந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com