ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: ஆப்கானியர்கள் உள்பட 6 பேர் கைது

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதை மாத்திரைகளை வயிற்றில் கடத்தி வந்த சம்பவம் தொடர்பாக, அந்நாட்டைச் சேர்ந்த நால்வர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 
ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: ஆப்கானியர்கள் உள்பட 6 பேர் கைது


ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதை மாத்திரைகளை வயிற்றில் கடத்தி வந்த சம்பவம் தொடர்பாக, அந்நாட்டைச் சேர்ந்த நால்வர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதுதொடர்பாக தில்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது: 

சம்பவத்தன்று, ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகார் நகரிலிருந்து ஒருவர் விமானத்தில் போதைப் பொருள் கடத்தி வருவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்தது. 

இதையடுத்து, தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. பயணி ஒருவரிடம் வழக்கம்போல சோதனை நடத்தப்பட்டபோது, அவரது உடைமையில் ஏதும் இல்லை. இருப்பினும் சந்தேகத்தின் பேரில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் போதை மாத்திரை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது. இதேபோன்று, அந்தப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் இருந்த இரு ஆப்கானிஸ்தான் நாட்டவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.  

அவர்களிடமிருந்து 253 போதைப்பொருள் மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.  இவற்றின் மொத்த எடை 1.8 கிலோ ஆகும். 

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில், அவர்களிடம் போதைப் பொருள் வாங்க வந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார். அவரும் ஆப்கானிஸ்தான் நாட்டவரா வார். நான்கு பேரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், வசந்த குஞ்ச் பகுதியில் தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு 6 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 

கைது செய்யப்பட்ட அவர் அளித்த தகவலின் பேரில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மற்றொரு நபர் கைது செய்யப்பட்டு அவரிடம்  இருந்து 500 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மொத்த போதைப்பொருள்களின மதிப்பு ரூ.30 கோடிகளுக்கும் அதிகமாகும்.

போதைப் பொருள்களைக் கடத்தியதாக மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த மற்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com