சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 1,284 மதுபாட்டில்கள் பறிமுதல்: இளைஞர் கைது
By DIN | Published On : 18th April 2019 01:34 AM | Last Updated : 18th April 2019 01:34 AM | அ+அ அ- |

தில்லியில் சட்டவிரோதமாக காரில் கடத்திவரப்பட்ட 1,284 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் வடக்கு மாவட்டத் துணை ஆணையர் நுபுர் பிரசாத் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் வகையில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு வந்த தகவலில், ஒருவர் சாஸ்திரி நகரில் இருந்து வீர் பண்டா பைராகி மார்க் வழியாக காரில் சட்டவிரோதமாக மதுபானத்தை கடத்திச் செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, போலீஸார் அப்பகுதிக்குச் சென்று சம்பந்தப்பட்ட காரை மடக்கிப் பிடித்தனர். கார் ஓட்டுநரிடம் உரிய ஆணங்களை காண்பிக்குமாறு போலீஸார் கேட்டனர். ஆனால், அவர் உரிய ஆவணங்களைக் காண்பிக்கவில்லை.
மேலும், திருப்திகரமான வகையில் அவரது பதிலும் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, போலீஸார் காரை சோதனையிட்டனர். அப்போது, காருக்குள் ஹரியாணாவில் மட்டும் விற்பதற்குரிய 1,284 மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.
மது பாட்டில்களைக் கடத்தியதாக ஹரியாணா மாநிலம், பஹதுர்கா பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (37) என்பவர் கைது செய்யப்பட்டார். காரும் பறிமுதல் செய்யப்பட்டது என்று காவல் உயர் அதிகாரி நுபுர் பிரசாத் தெரிவித்தார்.