"சமர்தான்' திட்டத்தால் கைதிகளின் தற்கொலை விகிதம் குறைந்துள்ளது: திகார் சிறை அதிகாரிகள்

திகார் சிறையில் கைதிகளுக்கு "சமர்தான்' திட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட மனநல ஆலோசனையால்

திகார் சிறையில் கைதிகளுக்கு "சமர்தான்' திட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட மனநல ஆலோசனையால், தற்கொலை செய்துகொள்ளும் கைதிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என்று சிறை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 
சிறையில் கைதிகள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் முயற்சியாக, சமர்தான் என்ற திட்டத்தை திகார் சிறை நிர்வாகம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. அந்த மனநல ஆலோசனை திட்டத்தை செயல்படுத்தி ஓராண்டு ஆகியுள்ள நிலையில், திகார் சிறை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில், சிறைகள் இயக்குநர் அஜய் காஷ்யப் பேசியதாவது: 
சமர்தான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு ஆகியுள்ள நிலையில் 7,000 கைதிகளுக்கு மனநல நிபுணர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதனால் கைதிகளிடையே குறிப்பிடத்தக்க மனமாற்றம் நிகழ்ந்துள்ளது. 
அவர்களிடையேயான வன்முறைச் சம்பவங்கள், முறைகேடான செயல்கள், தற்கொலைச் சம்பவங்கள் போன்றவை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன. 
அதிலும், இந்த குறிப்பிட்ட காலத்தில் முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் கைதிகளின் தற்கொலை விகிதமானது, 7-இல் இருந்து ஒன்றாகக் குறைந்துள்ளது. அளவுக்கு அதிகமான கைதிகள், போதிய அளவு சிறை நிர்வாகிகள் இல்லாமை, மன அழுத்தம் போன்றவை கைதிகளை பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும் நடத்துவதற்கு சவாலை ஏற்படுத்துகிறது என்று அஜய் காஷ்யப் பேசினார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நீதிபதி முக்தா குப்தா பேசுகையில், "சிறைக் கைதிகளுடன் உரையாடுகையில், நம்பிக்கையின்மை, நோக்கமின்மை போன்றவை வெளிப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதால், சிறையில் அவர்களுக்கான தனியுரிமை, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் போன்றவை பாதிக்கப்படுவதுடன், வன்முறை, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர்.
வழக்குரைஞரோ, நீதிபதியோ, சிறை அதிகாரிகளோ கைதிகளின் கருத்துகளை கேட்க வேண்டும். அவர்களின் பெரும்பாலான பிரச்னைகளை நம்மால் சரி செய்ய இயலும். சிறையில் அவர்களை கவனிக்கும் வகையில் கூடுதல் அதிகாரிகள் இருக்க வேண்டும்' என்று நீதிபதி முக்தா குப்தா பேசினார். 
நிகழ்ச்சியில் பேசிய தில்லி தலைமைச் செயலர் விஜய் குமார் தேவ், "சிறையில் நுழைந்த பிறகு தாங்கள் சந்திக்கும் மன அழுத்தம் காரணமாகவே கைதிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதைக் குறைக்க சிறை நிர்வாகம் மேற்கொண்டுள்ள சமர்தான் நடவடிக்கை பாராட்டுக்குரியது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com