தில்லியில் மூன்றாவது நாளாக மருத்துவர்கள் போராட்டம்!: அவசர சிகிச்சைப் பிரிவு மட்டும் செயல்படுகிறது



புது தில்லி, ஆக. 3: தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லியில் மருத்துவர்கள் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தனர். எனினும், அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் மட்டும் தங்கள் பணிக்குத் திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை ஏற்படுத்த வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏழைகள், மாணவர்கள் மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளதாக குற்றம்சாட்டி எய்ம்ஸ் உள்பட  பல்வேறு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வியாழக்கிழமை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்திருந்தனர். 
இதையடுத்து, தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் குழுவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார். 
அப்போது, நெக்ஸ்ட் தேர்வை நீக்குமாறு மருத்துவர்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினர். அதற்கு, இந்தத் தீர்வு மருத்துவர்களுக்கு எதிராக இருக்காது என்று அமைச்சர் உறுதியளித்தார். 
இந்நிலையில், மருத்துவர்கள் போராட்டம் காரணமாக தில்லியில் உள்ள பல்வேறு முக்கிய அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் பிரிவு இயங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் தில்லியில் உள்ள உறைவிட மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். எனினும், அவசர சிகிச்சை பிரிவுகள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் மீண்டும் செயல்படத்தொடங்கியது நோயாளிகளுக்கு நிவாரணம் தருவதாக இருந்தது. 
இதனிடையே, சப்தர்ஜங் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர்  சுனில் குப்தா, மருத்துவமனையின் உறைவிட மருத்துவர்கள் சங்கத்தின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், மருத்துவர்கள் தங்களது பணிக்கு உடனடியாகத் திரும்பாவிட்டால் அவர்களுக்கு எதிராக பணியிடைநீக்கம், பணி நீக்கம், விடுதியில் இருந்து வெளியேற்றுவது போன்ற கடும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது என கூறியிருந்தார். 
இதையடுத்து, தில்லியில் உள்ள எய்ம்ஸ் வளாகம், சப்தர்ஜங் மருத்துவமனை பகுதியில் சனிக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதனிடையே, சப்தர்ஜங் மருதுவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருப்பதாக அதன் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். 
இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி கூறுகையில், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. போலீஸார்  மருத்துவமனைப் பகுதியில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும், அமைதியைப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார். 
எய்ம்ஸ், வர்த்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஒரு பகுதியினர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்தப் போராட்டத்தில் ஆர்எம்எல் மருத்துவமனையின் உறைவிட மருத்துவர்கள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் உறைவிட மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பிலும்,  ஐக்கிய உறைவிட மருத்துவர்கள் சங்கத்திலும் இணைந்தவர்கள் ஆவர். எனினும், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் உறைவிட மருத்துவர்கள் சங்கங்களில் பல, தாங்கள் அவரச சேவைகளை மீண்டும் தொடங்கிவிட்டதாக தெரிவித்தன. 
சனிக்கிழமையில் இருந்து சில தில்லி அரசு  மருத்துவமனைகள் தங்களது பணிகளைத் மீண்டும் தொடங்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கு தில்லியில் ஷாதராவில் உள்ள டாக்டர் ஹெட்ஜ்வர் ஆரோக்யா சன்ஸ்தான் உறைவிட மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சனிக்கிழமை பணிக்குத் திரும்பிவிட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  எய்ம்ஸ் உறைவிட மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தபோதிலும், நோயாளிகளின் நலன்களைக் கருத்தில்கொண்டு அவசர சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. 
மேலும், மருத்துவர்களின் கவலைகளைத் தீர்க்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கட்சி எம்.பி.களும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் அவசர சேவைகளில் இருந்து உறைவிட மருத்துவர்கள் விலக வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளது. 
மருத்துவர்கள், நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டுதான் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதனால், பணிக்குத் திரும்புமாறும் மருத்துவர்களை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com