எய்ம்ஸ் மருத்துவர்கள் பணிக்கு திரும்பினர்

தேசிய மருத்துவ ஆணைய மசோதா குறித்த பிரச்னைக்கு தகுந்த தீர்வு காணப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை

தேசிய மருத்துவ ஆணைய மசோதா குறித்த பிரச்னைக்கு தகுந்த தீர்வு காணப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வாக்குறுதி அளித்ததையடுத்து, கடந்த மூன்று தினங்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பணிக்கு திரும்பினர். கடந்த மூன்று தினங்களாக கடும் அவதிக்கு உள்ளாகியிருந்த நோயாளிகள் இதனால்  சற்று ஆறுதல் அடைந்தனர்.
இதுதொடர்பாக உள்ளுறை மருத்துவர்கள் எய்ம்ஸ் இயக்குநருக்கு அளித்துள்ள கடிதத்தில், "தேசிய மருத்துவ ஆணையத்தின் நெறிமுறைகள் இறுதி செய்யப்படும்போது எய்மஸ் உள்ளுறை மருத்துவர்கள் சங்கம், மருத்துவ மாணவர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வாக்குறுதி அளித்துள்ளார். ஆகையால், ஞாயிற்றுக்கிழமை முதல் பணிக்கு திரும்புகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதே மதோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சஃப்தர்ஜங் உள்ளுறை மருத்துவர்கள் இன்னும் பணிக்கு திரும்பவில்லை. பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை பணிக்காலமாக கருத்தப்படும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் உறுதியளித்துள்ளதாக உள்ளுறை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றியது. 
இந்த மசோதாவில் உள்ள சில அம்சங்கள் மருத்துவ கல்விக்கும், சுகாதார சேவைக்கும் எதிராக உள்ளதாக மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நெக்ஸ்ட் தேர்வைக் கொண்டு வருவது குறித்தும் உயர் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு ரத்து குறித்தும் இந்த மசோதாவில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்று மருத்துவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com