அவதூறு வழக்கு: கேஜரிவால் மனுவுக்கு விஜேந்தர் குப்தா பதில் அளிக்க நோட்டீஸ்

அவதூறு வழக்கில் அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல்

அவதூறு வழக்கில் அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு பாஜக மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தாவுக்கும், தில்லி அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இது தொடர்பான பதிலை அடுத்து விசாரணை நடைபெறும் நவம்பர் 20-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனோஜ் குமார் ஓரி உத்தரவிட்டுள்ளார்.
எனினும், கீழமை நீதிமன்றம் ஜூலை 8-ஆம் தேதி தனக்கு அழைப்பாணை அனுப்பி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீது நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முன்னதாக, ஜூலை 8-ஆம் தேதி கீழமை நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணை உத்தரவை எதிர்த்து கேஜரிவால் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஜூலை 26-ஆம் தேதி கீழமை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
இந்நிலையில், பிரதான மனு மீது பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சுட்டுரையை மறுபதிவு செய்தது அவதூதூறாக இருந்தால், அதை முடிவு செய்ய விசாரணை நடத்துவது தேவையாக இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது என உயர் நீதிமன்றம் தெரிவித்தது. 
கேஜரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விகாஷ் பாவா, வழக்குரைஞர் அருணாத்ரி அய்யர் ஆகியோர், " கேஜரிவால் தனது சுட்டுரை அல்லது சுட்டுரை மறுபதிவில் குப்தாவின் பெயரைக் குறிப்பிடவில்லை. இதை முடிவு செய்வதற்கான விசாரணை நடத்தும் தேவையும் எழவில்லை' என வாதிட்டனர்.
முன்னதாக, விஜேந்தர் குப்தா தனது புகாரில் தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரைக் கொலை செய்யும் சதித் திட்டத்தில் தாம் ஈடுபட்டிருப்பதாக கேஜரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோர் சுட்டுரை பதிவிட்டிருந்ததாகத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் கேஜரிவால் வழக்குரைஞர் முகம்மது இர்ஸாத் மூலம் தாக்கல் செய்திருந்த மனுவில், "தனது சுட்டுரையில் விஜேந்தர் குப்தா பெயரைக் குறிப்பிடவோ, அவருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டை முன்வைக்கவோ இல்லை' எனத் தெரிவித்திருந்தார்.
நிகழாண்டு பொதுத் தேர்தலின்போது மே மாதத்தில் தேர்தல் பிரசாரத்தில் கேஜரிவால் தாக்கப்பட்டார். அதன்பிறகு, "இந்திரா காந்தி தனது பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டது போல, தன்னையும் தனது பாதுகாவலரால் கொலை செய்ய பாஜக விரும்புவதாக கேஜரிவால் சுட்டுரையில் குற்றம்சாட்டியிருந்தார். 
அவரது கருத்துக்குப் பதில் அளிக்கும் வகையில், "கேஜரிவால் தனது பாதுகாவல் அரணை தளர்த்தியதன் காரணமாகவே தாக்கப்பட்டார்' என விஜேந்தர் குப்தா தெரிவித்திருந்தார். இதற்கு மணீஷ் சிசோடியா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், கேஜரிவாலை கொலை செய்ய சதித் திட்டம் இருந்ததாகவும், இதன் ஒரு பகுதியாக குப்தா இருந்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com