பல்ராம் ஜாக்கருக்கு நாடாளுமன்றத்தில் மரியாதை!

மறைந்த முன்னாள் மக்களவைத் தலைவர் டாக்டர் பல்ராம் ஜாக்கரின் பிறந்த நாளையொட்டி, நாடாளுமன்றத்தில்

மறைந்த முன்னாள் மக்களவைத் தலைவர் டாக்டர் பல்ராம் ஜாக்கரின் பிறந்த நாளையொட்டி, நாடாளுமன்றத்தில் அவரது உருவப் படத்திற்கு தலைவர்கள் வெள்ளிக்கிழமை மரியாதை செய்தனர்.
நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்ராம் ஜாக்கரின் உருவப் படத்திற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை இணையமைச்சர் (தனி) பிரஹலாத் சிங் பட்டேல் ஆகியோர் மலர் மரியாதை செய்தனர். 
மேலும், நாடாளுமன்ற முன்னாள், இன்னாள் உறுப்பினர்கள் பலரும், மக்களவைத் தலைமைச் செயலர் ஸ்நேஹலதா ஸ்ரீவாஸ்தவா ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
 டாக்டர் பல்ராம் ஜாக்கர் 1923, ஆகஸ்ட் 23-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம், ஃபிரோஜ்பூர் மாவட்டம், பஞ்ஜ்கோஸி கிராமத்தில் பிறந்தார். 1980, ஜனவரி 22-இல் ஏழாவது மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தனது சீரிய வாழ்வை மக்களவைத் தலைவராகத் தொடங்கினார். 
1985, ஜனவரி 16-ஆம் தேதி மீண்டும் இரண்டாவது முறையாக மக்களவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989, டிசம்பர் வரை அப்பதவியில் இருந்த அவர், சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து இருமுறை மக்களவைத் தலைவராக முழுமையாக பதவியில் இருந்த ஒரே நபர் என்ற சிறப்பைப் பெற்றார். 
1991-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பல்ராம் ஜாக்கர் மீண்டும் மக்களவைக்கு சிக்கர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு,  மத்திய வேளாண் துறை அமைச்சரானார். 
நாடாளுமன்றத்திலும், அரசிலும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதிலும், முன்னிலைப்படுத்துவதிலும் வெற்றிகரமாகச் செயல்பட்டார். பல்ராம் ஜாக்கர் 2016, பிப்ரவரி 3-ஆம் தேதி காலமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com