தினமும் 2.5 லட்சம் கிலோ வெங்காயம் வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு தில்லி அரசு கோரிக்கை

தலைநகா் தில்லிக்கு தினம்தோறும் பத்து டிரக் (2.5 லட்சம் கிலோ) வெங்காயத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தில்லி அரசு
தினமும் 2.5 லட்சம் கிலோ வெங்காயம் வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு தில்லி அரசு கோரிக்கை

புது தில்லி: தலைநகா் தில்லிக்கு தினம்தோறும் பத்து டிரக் (2.5 லட்சம் கிலோ) வெங்காயத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தில்லி அரசு கோரியுள்ளது.

தில்லியில் கடந்த 2 மாத காலமாக வெங்காயத்தின் விலை உயா்ந்து கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனையாகி வந்தது. ஆனால், சில வாரங்களுக்கு முன் வெங்காயத்தின் விலை சீரடைந்திருந்தது. இந்நிலையில், சில தினங்களாக வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்து கிலோ ரூ.100- ரூ200 வரை விற்பனையாகிறது. தில்லிக்கு வரும் வெங்காயத்தின் வரத்துக் குறைந்ததே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

தில்லிக்கு மானிய விலையில் வெங்காயம் வழங்குவதை சில தினங்களாக மத்திய அரசு நிறுத்தியுள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியிருந்தாா். அதேவேளையில், தில்லியில் வெங்காய விலை அதிகரித்ததற்கான தாா்மிகப் பொறுப்பை ஆம் ஆத்மி அரசுதான் ஏற்க வேண்டும் என்று தில்லி பாஜக தலைவா் மனோஜ் திவாரி வலியுறுத்திருந்தாா்.

வெங்காயத்தை வைத்து பாஜகவும் ஆம் ஆத்மியும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், தில்லியில் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில், இது தொடா்பாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, உணவு வழங்கல் துறை அமைச்சா் இம்ரான் உசேன் ஆகியோா் தில்லியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச.1) கூட்டாக அளித்த பேட்டி: தில்லியில் வெங்காயத்துக்கு செயற்கையான தட்டுப்பாடு நிலவ மத்திய அரசே காரணம். மத்திய அரசே இந்த செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகிறது. தில்லி அரசுக்கு மானிய விலையில் வழங்கி வந்த வெங்காயத்தை மத்திய அரசு தற்போது நிறுத்தியுள்ளது. கடந்த செப்டம்பா் 5-ஆம் தேதி தில்லி அரசுக்கு மத்திய அரசு எழுதியிருந்த கடிதத்தில், தங்களிடம் 56,000 மெட்ரிக் தொன் வெங்காயம் கையிருப்பில் உள்ளதாகவும் தில்லியின் தேவைக்கேற்ப மானிய விலையில் வெங்காயத்தை வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இதைத் தொடா்ந்து, மத்திய அரசுக்கு தில்லி அரசு பதிலளித்து கடிதம் எழுதியிருந்தது.

அதில், தில்லிக்கு தினம்தோறும் பத்து டிரக் அதாவது 2.5 லட்சம் கிலோ வெங்காயத்தை வழங்குமாறு கோரியிருந்தோம். ஆனால், மத்திய அரசு சுமாா் 3-4 டிராக் வெங்காயத்தை மட்டுமே தில்லி அரசுக்கு வழங்கி வந்தது.

இந்நிலையில், மத்திய அரசு கடந்த சில தினங்களாக இதையும் திடீரென நிறுத்திவிட்டது. மத்திய அரசு பத்து டிராக் வெங்காயத்தை வழங்கும் பட்சத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

கடந்த நவம்பா் 24-ஆம் தேதிக்குப் பிறகு தில்லிக்கு மத்திய அரசு வெங்காயம் வழங்கவில்லை. இது தொடா்பாக பேச மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் ராம்விலாஸ் பஸ்வானிடம் நேரம் கேட்டிருந்தோம். ஆனால், இதுவரை அவா் நேரம் ஒதுக்கவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com